திருநகரப் படலம் 55


மேற்கொள் சமணரால் கல்லுடன் பிணித்து கடலில் அமிழ்த்தப் பெற்றும்
எங்கள் திருநாவுக்கரசர் பெருமானார் அஞ்செழுத்தின் துணையால்
மேலெழுந்து விளங்குதலை ஒக்கும்.

     குளிர்-தங்கிய. கார் அமணர்-இருண்ட அறிவினையுடையவர். முருடு-
வன்மை. ‘வன்பராய் முருடு ஒக்கும் என் சிந்தை’ (திருவா) இருப்பை முதலிய
மரங்களில் காணப்பெறும் முடிச்சு. இங்குத் திருநாவுக்கரசர் தம் கருணை
வடிவம் கண்டும் தீங்கிழைக்கும் திண்மை.

யானைக் கூடம்

கலி விருத்தம்

முறைமுறை பனைக்கைநீர் முகந்து வாய்மடூஉ
நிறைதடங் குறைதட மாக்கு நீண்டவெண்
பிறைமருப் பொருத்தல்மா மதப்பெ ருக்கினால்
குறைதடம் நிறைதட மாக்குங் கொள்கைத்தே.      11

     களிறு, பனையை ஒத்த துதிக்கையால் நீரைப் பருகி நிறைந்த நீர்
நிலையைக் குறைபடுத்தும்; இனி, மதநீர் பெருக்கிக் குறைந்த நீர் நிலையை
நிறைபடுத்தும். இவ்வாறு மாறி மாறி நிறைந்தும், குறைந்தும் காணப்பெறும்
கோட்பாட்டினை உடைத்து அத்தடம்.

     ஒருத்தல்-யானைத் தலைவன் (கலி-46: 3, நச்) குறை தடம், நிறை தடம்
என்பன, இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின்மேல் ஏற்றப்பட்டது.

தாம்உறை இடந்தரி யலர்கட் கீந்தவர்
தாம்உறை இடங்களில் தங்கி ளைக்குலந்
தாம்உறப் பரிவருத் தனைசெய் வேழங்கள்
தாம்முறை முறைதிரி தண்டம் எண்ணில.        12

     யானைக் குலத் தலைவர்கள் தம் குழாத் தொடும் தங்குகின்ற
காட்டினைத் தம் அரசனது பகைவர்க்காக்கி, அவர் அரசு செய்கின்ற
நாட்டிடத்தைத் தாம் சுற்றத்தொடும் கைக்கொண்டு இங்ஙனம் மாற்றிக்
கொண்டு மாறி, மாறித் திரிகின்ற யானை செல்லும் வழிகள் அளவில்லன
உள்ளன.

     தண்டம்-யானை செல்வழிகள். பரிவருத்தனை-மாற்றிக் கொள்ளல்.

மழைப்புனல் தங்கள்மேல் ஊற்று மாமுகில்
உழைச்செல வெகுண்டெதிர் இறைப்ப தொப்பநீள்
புழைக்கையில் நிறையநீர் முகந்து போர்மதத்
தழைச்செவிக் கரிகள்விண் தலத்து வீசுவ.        13

     போர்த் தொழிலையும், மதப்பெருக்கமைந்த காதுகளையும் உடைய
யானைகள் தம்மேல் நீரைச் சொரிகின்ற கரிய மேகங்களிடத்துப் பகை
கொண்டு எதிர்செல உட்டுளை பொருந்திய துதிக்கையால் நிரம்ப நீரை
முகந்து விண்ணிடத்து வீசா நின்றன.