56காஞ்சிப் புராணம்


கறையடிச் சுவடெனுங் கனக வட்டில்கள்
நிறையவாக் கியமத நீரைச் செல்வர்போல்
சிறையளிக் குலமெலாந் தெவிட்ட உண்டுவாழ்ந்
தறைபெரு வளத்தன ஆம்பல் வீதியே.        14

     யானை செல்லும் வீதிகள், உரலை ஒத்த தம்முடைய காற்சுவடு
என்னும் பொற்கிண்ணங்களுள் வழிய ஒழுக்கிய மதநீரை வண்டின்
குழாங்கள் செல்வரைப் போலத் தேக்கெறிய வுண்டும் வாழ்ந்தும்
கழிக்கின்ற பேசப்பெறுகின்ற பெரிய வளத்தையுடையன.

கொடையினிற் கீழ்ப்படுங் கொண்டல் யாவையுந்
தடைபடச் சிறையிலிட் டாங்குச் சார்கடு
நடைஇரு முறச்செவி நான்ற வாய்க்களி
றடையவும் பிணித்தன அளவில் கூடமே.       15

     கைம்மாறு கருதாது கொடுக்கும் பண்பிற் றாழும் மேகங்கள்
அனைத்தையும் போக்கொழியச் சிறை வைத்தாற்போல விரைந்த
செலவினையும் இருபெரிய முறம்போன்ற காதுகளையும், தொங்கிய
வாயினையும் உடைய களிறுகள் முற்றவும் அளவில்லாத யானைகட்டு
மிடங்கள் அகப்படுத்தன.

     அவையுடையோர் மேகத்தின் மேம்பட்ட கொடையினர் என்க.

குதிரைப் பந்தி

கரிஉமிழ் விலாழியுங் காய்சி னக்கடும்
பரிஉமிழ் விலாழியும் பாய்ந்து சேறுசெய்
தெருவெலாம் அந்நலார் சீற டிச்சுவ
டுருகெழு தாமரைத் தோற்றம் ஒக்குமே.        16

     யானை உமிழும் வாய்நுரையும், சுடுகின்ற கோபமும், கடியநடையும்
உடைய குதிரை உமிழும் வாய் நுரையும் பரவிச் சேறுபடுகின்ற
தெருக்களிலெல்லாம் அந்நகர மகளிர் தம் சிற்றடி உற்ற சுவடு (பதும)
ரேகை பதிதலான் வடிவு கெழுமிய தாமரையின் பொலிவினை ஒத்துநிற்கும்.

சுலவுகொய் யுளையடிச் சுவடு தோறும்மேல்
கலனையின் உக்கசெம் மணிக திர்ப்பன
பலசுடர்த் தகழிகள் பரப்பி வைத்தெனக்
குலவுநல் வளத்தன குந்த வீதியே.            17

     மண்டிலமாய்ச் செல்கின்ற கத்தரிக்கப் பெற்ற பிடரிமயிரினையுடைய
குதிரையின் அடிச்சுவடுகளுள் எவ்விடத்தும் மேலிடுதவிசினின்றும் உதிர்ந்த
மாணிக்கங்கள் கதிர் விடுதல், சுடரையுடைய பல அகல்கள் (தகழி)
பரப்பிவைத்தாற் போல விளங்குகின்ற நல்லவளத்தன ஆகும்.