திருவேகம்பப் படலம் 563


     ‘விளக்கமுறும் திருவேகம்பத்தில் விரும்பி வீற்றிருக்கும் அமலனே!
தேவர்கள் நடுங்கும் படி பாற்கடலிற் றோன்றிய சுட்டழிக்கும் விடத்தினை
உண்டு திருக்கழுத்தினில் திகழ அமைத் தருளும் உயிர்த் துணையே!
அடியேனுக்கு நலம் விளங்குகின்ற திருத் தொண்டினை வகுத்துரைத் தேவல்
கொள்க என வேண்டலும்,

நிரந்த நீள்உல குக்குபா தானம்நீ நிமித்தம்
அரந்தை தீர்த்தருள் செய்யும்யாம் ஆதலின் அணங்கே
கரந்த வையகம் பண்டுபோற் காண்டகு மாறுன்
சுரந்த பேரெழில் வடிவினில் தோற்றெனப் பணித்தான்.    8

     பெருமான், தெய்வப் பெண்ணே! நிரல்படி நீளும் உலகிற்கு முதற்
காரணம் நீ. உயிர்களுக்குத் துன்பத்தை நீக்கி இன்பத்தை அருளும்யாம்
நிமித்தகாரணம் ஆவோம். ஆதலின், ஒடுங்கிய உலகத்தை முன்போலப்
புலப்படுமாறு உன்னுடைய ஊற்றெடுக்கும் பெருங்கருணையும், பேரழகும்,
சுரந்த வடிவினில் தோன்றச் செய்’ எனப் பணித்தனர்.

     உலகிற்கு முதற் காரணமாகிய மாயைக்கு ஆதாரமாதல் பற்றிச் சத்தியை
முதற்காரண மென்றனர். முதற் காரணமாகிய கிழங்கினின்றும் தோன்றிய
தாமரையை அக்கிழங்கிற்கு ஆதாரமாதல் பற்றிச் சேற்றில் தோற்றிய
வென்னும் பொருள் படப்பங்கசம் என்றாற் போலக் கொண்க,.

அரவும் அம்புலிக் குழவியும் அலையெறி நதியும்
விரவு செஞ்சடைப் பெருந்தகை பணிந்தமெய் யருள்தன்
சிரமி சைக்கொடு செறிந்தபல் லுயிர்களும் முறையால்
பரவை நித்தில முறுவலாள் படைப்பவ ளானாள்.    9

     பாம்பும், பிறையும், கங்கையும், விரவியிருத்தற் கிடனாகிய சிவந்த
சடையினையுடைய பெருமானார் ஆணையிட்ட மெய்யருளைச் சிரமேற்றாங்கிக்
கடலிற் படு முத்தை ஒக்கும் வெள்ளிய பற்களையுடைய அம்மையார்
முறையே பல்லுயிர்களையும் சிருட்டிப்பவராயினார்.

எண்க ணாளனை எழில்வலக் கண்ணினும் பதும
வண்க ணாளனை மற்றிடக் கண்ணினும் நுதல்மேல்
ஒண்க ணாளனை நள்ளுடைக் கண்ணினும் உலவாப்
பெண்கள் நாயகி ஈன்றனள் முத்தொழில் பிறங்க.   10

     பிறப்பிறப் பில்லாத அம்மையார் எட்டுக் கண்களையுடைய
நான்முகனை அழகிய வலக்கண்ணிலும், காக்கும் வள்ளன்மை பூண்ட
பதுமாக்கன் எனப் பெறும் திருமாலைஇடக்கண்ணிலும், நெற்றிவிழியினை
யுடைய உருத்திர மூர்த்தியை நடுவிலே விளங்கும் நெற்றிக் கண்ணிலும் ஆக,
படைத்தல், காத்தல், அழித்தலாகிய முத்தொழில்களும் நிகழப் படைத்தனர்.