564காஞ்சிப் புராணம்


தழங்கும் அங்கியங் கடவுள்கா யத்திரிச் சந்தம்
முழங்கு சீர்இர தந்திர சாமம்முத் தோமம்
பழங்க ணின்மறை யோருட னயத்தினைப் பரிவின்
வழங்கு பேரருட் கருணைகூர் மதிமுகத் தளித்தாள்.  11

     இரங்கி அருளும் பேரருட்கருணை மீக்கூரும் மதியை ஒக்கும்
திருமுகத்தில் ஒலியெழும் அக்கினிதேவனையும், காயத்திரிச்சந்தத்தையும்,
ஒலிக்கின்ற சிறப்பினையுடைய இரதந்திரமாகிய சாமத்தையும், முத்தோ
மங்களையும், துன்பமில்லாத வேதியருடன் முகத்திற் படைத்தனர்.

காமர் இந்திரன் திரையிட்டுப் பெனக்கரை சந்தம்
தோமில் ஐந்துமூன் றுறழ்ந்ததோ மம்பெருஞ் சாமம்
தாம நீள்முடி மன்னவர் அவியினைத் தகைசால்
மாம ணிக்கலன் வயங்குமென் புயத்திடைத் தந்தாள்.  12

     மேன்மையும், பெருமையும் பொருந்திய மணிகள் கொண்டாக்கிய
ஆபரணங்கள் விளங்கும் மெல்லிய தோள்களில் அழகிய இந்திரனையும்,
திரையிட்டுப்பெனச் சொல்லப் படுகிற சந்தத்தையும் குற்ற மில்லாத
பதினைந்து தோமத்தையும், பிருகத் சாமத்தையும், மாலையையும், நீண்ட
முடியினையும் பூண்ட சத்திரியர்களையும், அவியினையைும் படைத்தனர்.

தக்க விச்சுவ தேவர்கள் சாகதச் சந்தம்
பொக்க மில்வயி ரூபமாம் புகலருஞ் சாமம்
தொக்க மேன்மையிற் பதினெழு தோமம்ஆன் வணிகர்
இக்கி ளந்தவை முழுவதுங் கவானிடத் தீன்றாள்.     13

     தகுதி வாய்ந்த விச்சுவதேவர்களையும், சாகதச் சந்தத்தையும்,
பொய்யில்லாத வயிரூபம் எனப்பெறும் சொல்லுதற்கரிய சாமத்தையும்,
மேன்மை பொருந்திய பதினேழு தோமத்தையும், பசுக்களையும், வணிகரையும்
ஆக இங்குக் கூறிய அனைத்தினையும் துடையில் தோற்றுவித்தனர்.

சந்த மாம்அனுட் டுப்புவை ராசமென் சாமம்
வந்த மூவெழு தோமம்வாம் புரவிபின் னவரைச்
செந்த ளிர்ப்பதத் தீன்றனள் இவர்க்கொரு தெய்வம்
தந்தி லாமையின் முன்னவர் இவர்தொழுந் தலைவர்   14

     அனுட்டுப்புச் சந்தத்தையும், வைராச சாமத்தையும், இருபத்தொரு
தோமத்தையும், தாவுகின்ற குதிரைகளையும், சூத்திரர்களையும் செவ்விய
தளிரை ஒக்கும் திருவடியிற்றந்தனர். இவர்தமக்கொரு வழிபடு கடவுள்
வரையறுக்கப்படாமையினால் முதல் மூன்று வருணத்தவர்களே இவர்க்குத்
தலைவராவர்.

ஏனைப் புல்மரம் முதலிய பூதகா ரியமும்
மேனிப் பால்உரோ மங்களின் உயிர்த்துமெய் யன்பின்
நானப் பூங்குழல் நாயகி மாந்தரு நீழல்
வானக் கங்கைதோய் முடிச்சடை வள்ளலைத் தொழுதாள்.  15