568காஞ்சிப் புராணம்


     ‘‘இன்னிசையை எழுப்பும் வண்டுகள் உழுகின்ற மலர் மாலை
பொருந்திய தோள்களையுடைய மக்களே! போற்றிக் கேளுங்கள்; ‘‘திரிபின்றி
நிலைபெறும் உருத்திரன் ஒருவனே பிரமம். வேறொரு பொருளும் பிரமமாதல்
இல்லை என்பது தெளிவாம். பேசப் பெறும் மெய்ப் பொருளையுடைய
பிரமமென்னும் பெயரையுடைய வேதம் ஒற்றை மாமர மாகக் கிளைத்தது
காணுங்கோள்! அவ்வேதத்திற்குத் தலைவராகிய யாமே சிவலிங்கவடிவு
கொண்டு அதன் அடியில் எழுந்தருளியுள்ளோம்.”

     ஏதம் நீக்குசொல் வடிவினுந் தனிமா எனப்ப டுந்தரு வடிவினும்
அதற்கு, நாதர் யாமெனத் தெளிமின்இங் கெமது நாமம் ஏகம்ப
நாதன்என் றுரைப்ப, ஆதி மந்திரம் அஞ்செழுத் திதுவே ஐம்பெ
ருங்கொடும் பாதகம் அறுக்கும், ஓதும் ஐவகைப் பிரமமந்திரத்தும்
அஞ்செ ழுத்தினும் உயர்ந்ததிம் மனுவால்.                   27

     ‘‘துன்பத்தைப் போக்கும் சொல்வடிவினும் ஒற்றைமா எனப்பெறும்
மரவடிவினும் அவ்வேதத்திற்கு யாமே நாதர் என்று கூறுவர். காலமும்,
தலைமையும் ஆகிய ஆதிமந்திரம் இதுவே. ஈ தஞ்செழுத்தே. ஐந்து பெரிய
கொடிய மலங்களாகிய மரங்களை அறுக்கும் வாளாகும். ஓதப் பெறும்
பஞ்சப்பிரம மந்திரம் சிறந்தது.

     ஏகாம்ரநாத: என்பது ஏகம்பநாதன் எனத்தமிழில் ஐந்தெழுத்தாய்
வழங்கும். ஏக+ஆம்ரம்=ஏகாம்ரம்=ஏகாம்பரம்-ஒற்றை. மாமரம்.

     விதிவ ழாதபல் லுறுப்புடை மறையின் மிக்க தாகுங்கா யத்திரி
அதனின், அதிகம் அஞ்சமா மந்திரம் அதனின் ஆறி ரண்டெழுத்
ததனின்எட் டெழுத்தாம், பதியும் மேன்மைஎட் டெழுத்தின் அஞ்
செழுத்துக் கோடி கோடிமேம் பட்டதஞ் செழுத்தின், நுதலும் ஏகம்ப
நாதமா மனுத்தான் நூறு கோடியின் மிக்கதென் றுணர்வீர்.      28

     முறைபிழாத பல அங்கங்களையுடைய வேதத்தில் காயத்திரி மந்திரம்
மிக்க சிறப்பினதாகும். அதனினும் மிக்கது ‘அசபா’ என்னும் பெருமந்திரம்
ஆகும். அதனின் மிக்கது பன்னிரண்டெழுத்தாலமைந்த ‘ஓம் நமோ
பகவதே வாசு தேவாய’ என்னும் மந்திரம். எட்டெழுத்தாலாய ‘ஓம் நமோ
நாராயணாய’ என்னும் மந்திரம் முன்னையதிற் சிறந்தது ஆம்.

     மேன்மை பொருந்தும் எட்டெழுத்தினைக் காட்டிலும்
‘திருவைந்தெழுத்து’ என்னும் மந்திரம் பலகோடி உயர்வுடையதாம்.
எண்ணப் பெறும் ஏகம்பநாத மகாமந்திரம் அஞ்செழுத்தைக் காட்டிலும்
நூறு கோடியினும் மிக்கது என்றறிமின்.”