அன்ன தன்மையின் மனுஎவற் றினுக்கும் அதிக மாகிய ஏகம்ப நாதன், என்னும் மந்திரம் இயம்புநா வுடையாற் கிப்பி றப்புறும் பெரும்பயன் எய்தும், பன்ன ரும்பெருங் கீர்த்தியும் ஊக்கப் பாடும் ஆக்கமும், ஆயுளும் வளரும், மன்னு கல்வியுங் கேள்வியும் ஒழுக்கும் வழுக்கி லான் அவனே எனத் துணிவீர். 29 அத்தன்மையினால் மந்திரங்கள் எவற்றினுக்கும் மேலாகிய ஏகம்பநாதன் என்னும் மந்திரத்தைக் கணிக்கும் நாவினர்க் கிப்பிறப்பில் மிகு பெரும் பயன்கள் வந்து கூடும். சொல்லற் கரிய பெரும்புகழும், மன எழுச்சியும், செல்வமும், ஆயுளும் வளர்ச்சியுறும். நிலைத்த கல்வியும், கேள்வியும், நல்லொழுக்கமும் ஆகிய இவற்றைத் தப்பாது பெறுவோனும் அவனேயாவன் என உறுதியாய் உணர்வீர். கன்னி தந்தைதாய் வேதியர்ச் செகுத்தோர் கள்ளு மாந்துநர் கள்ளுநர் குரவன், பன்னி மாணலம் விழைந்தவர் மற்றைத் தீர்வு காணரும் பழிவினை விளைத்தோர், என்னர் ஆயினும் ஏகம்பநாதன் என்னும் மந்திரம் ஒருமுறை கணிப்பின், துன்னும் வெங்கொடும் பாதகம் அனைத்தும் துனைவின் அங்கவர் தம்மைவிட்டோடும். 30 கன்னி, தாய், தந்தை, வேதியர் ஆகிய இவரைக் கொலை செய்தோர் ஆக, கள்ளைப் பருகினோராக, களவு செய்தோராக, தேசிகன் மனைவியை விரும்பினோராக, ஏனைய கழுவாய் காணலாகாத பழிபாவங்களைப் புரிந்தோராக எவ்வியல்பினராயினும் ‘ஏகம்பநாதன்’ என்னும் மந்திரத்தை ஒருமுறை எண்ணினராயின் பற்றும் மிகக்கொடிய பாவங்கள் யாவும் அவர்களை விரைவின்விட்டு ஓட்டெடுக்கும். அறப்ப யன்பொருள் இன்பம்வீ டென்றா அனைத்தும் ஓதுநர்க் களிக்கும்இம் மனுவை, இறப்ப வந்துமுற் றிரும்பசிப் பிணியின் ஈண்டி ஆருயிர் கவற்றும்வல் லிடரின், மறப்பி னாயினுங் கிளக்கவல் லுநரே மற்றெ மக்குமிக் கினியவர் கண்டீர், சிறப்ப இம்முறை மனுஇதன் பெருமை தெரிந்து கூறினர்க் கின்பவீடளிப்பேம். 31 ‘அறப்பயனையும், பொருளையும், இன்பத்தையும், வீட்டினையும், தன்னை ஓதுநர்க்கு வழங்கும் இம்மந்திரத்தை யாவும் கெட வந்து முற்றுகையிடும் பெரும் பசிநோயினும், அரிய உயிரைப் பெருகி வருத்தும் கொடுந்துன்பினும் மறந்தாயினும் கூறவல்லவர் யாவர்? அவரே எமக்குப்பெரிதும் இனியவர் ஆவர், இவ்வியல்பினையுடைய மந்திரத்தின் பெருமையை நன்கு தெரிந்து கணிப்பவர்க்குப் பேரின்ப வீட்டினை வழங்குவோம். என்று மாவடி முளைத்தெழுந் தருளும் இலிங்க மேன்மையை எடுத்துரைத் தருள, ஒன்றும் ஆனந்த உத்தியின் மூழ்கி |