சிரத்தின்மீது தெளித்தும், பருகியும், மூழ்கியும், தீர்த்தப்பயனைப் பெறுவோர்க்குத் தூய்மை செய்யும் சிறப்பினாலும், உயிரைக் காத்தலாலும், முத்தியை வழங்கலாலும் வினைநோயைப் போக்கும் திறத்தினானும் இந்நதி கம்பை எனப்படும். கம் என்னும் சொல் சிரம், உயிர், முத்தி, நீர் என்னும் பொருள் தரும்- சீதா, தயா, கருணா, கிருபா என்பன ஆகார ஈறுகள் ஐகாரம் ஆதல் போலக் கம்பா கம்பை எனத் தமிழில் இடம்பெறும். எழுசீரடி யாசிரிய விருத்தம் கங்கை மாநதி யமுனை வாணி முதல்க வின்பெறு நதியெலாம் பொங்கு வெண்டிரை எற்று கம்பை நறும்பு னற்கிணை எய்துறா மங்க லந்தரு கம்பை மென்புனல் தோய்ந்த காற்று வழங்கிடத் தங்கண் மேவிய புன்ம ரங்களும் இன்ப முத்தியை அண்ணுமால். 50 | கங்கை, யமுனை, சரசுவதி முதலிய தெய்வ நதிகள் கம்பை நதிக்கு ஒப்பாகா. மங்கலத்தைச் செய்யும் கம்பை நதியிற் படிந்துவந்த காற்றுத் தீண்டிய புல்லும், மரங்களும் கூட முத்தியைப் பெற்றுப் பேரின்பத்தில் திளைக்கும். யோக நன்னிலை யிற்ற வத்தின் வழீஇயி னார்உயர் கம்பையின் மோக மில்கய லாதி யாகி உயிர்த்து முத்தியின் நண்ணுவார் போகும் அக்கரை யிற்கி ளைத்த புதல்ம ரங்கள் உருத்திர லோக நின்று வழூஉம் உருத்திர ராகும் உண்மை உணர்ந்திடீர். 51 | யோகமும், தவமுமாகிய இந்நன்னிலைகளினின்றும் பிறழ்ந்தவர் உயர்ந்த கம்பாநதியில் நீர்வா ழுயிர்களாய் அவா முதலிய இன்றி உயிர்வாழ்ந்து முத்தியைத் தலைப்படுவர். உருத்திரலோகத்தினின்றும் பிழையால் வழுக்கிய உருத்திரர் நீண்ட அதன்கரையில் செடி, கொடி, மரங்களாகக் காட்சியளிக்கின்றனரென உணர்மின். யாண்டி றப்பவர் கட்கும் இப்புனல் இறுதி வேலையின் உச்சியில் தீண்டு மேல்அவர் முத்தி எய்துவர் தீஞ்சு வைஅமிழ் துண்பவர் ஏண்ட குந்திறல் அமர ராகுவர் இனைய பூம்புனல் உண்பவர் ஆண்ட நம்முட னாவர் ஆதலின் அமிழ்தின் மிக்கது கம்பைநீர். 52 | எங்கே இறப்பவர் ஆயினும் சிரமிசை இத்தீர்த்தம் படின் அவர் முத்தியை அடைவர். அமிழ்தம் உண்பவர் தேவரே யாவர். இந் நீரைப்பருகினோர் இறைவன் திருவடியைத் தலைப்படுவர். ஆகலின், அமிழ்தத்தின் மிக்கது இந் நீர். காட்சி எய்தரு மேன்மை சான்றுயர் கம்பை வார்புனல் ஆற்றினால் ஆட்சி எய்திய பதிஎ வற்றினும் அதிக மாயது காஞ்சியூர் மீட்சி யில்புகழ் இவ்வி ரண்டினும் வேறெ மக்குள வேணவா மாட்சி பெற் றுறுகங்கை காசியின் வைத்தி லேம்இது மெய்மையே. | |