576காஞ்சிப் புராணம்


     புறக் கண்ணிற்குப் புலனாகாத இக்கம்பாநதியினால் இறைவன்
அரசு வீற்றிருக்கும் ஏனைய தலங்களினும் காஞ்சியே ஏற்றமுடையதாகும்.
நிலைபெற்ற புகழையுடைய காசி, காஞ்சி ஆகிய இரு தலங்களில்
கங்கையையுடைய காசியினும் இத்துணை விருப்பம் எமக்கிலது, இது
சத்தியமாகும்.

பன்னிரு பெயர் மாட்சி

அறுசீரடி யாசிரிய விருத்தம்

புவன சாரம் மும்மூர்த்தி வாசம் விண்டு புரம்காஞ்சி
தவமார் கலிசித் திலயசித்து சகல சித்தி தபோமயஊர்
கவினார் பிரம புரம்ஆதி பீடங்கன்னி காப்புவினைப்
பவநோய் அறுக்குஞ் சிவபுரமாப் பகர்பன் னிரண்டு
                                திருப்பெயர்த்தால்.

     இத்தலம், புவனசாரம், மும்மூர்த்தி வாசம், விண்டுபுரம், காஞ்சி,
தவத்திற் கிடனாகிய கலிசித்து, இலயசித்து, சகலசித்திபுரம், தபோமய நகர்,
அழகிய பிரமபுரம், ஆதிபீடம், கன்னிகாப்பு, பிறவிநோயை அறுக்கும்
சிவபுரம் என்னும் பன்னிரு காரணப் பெயர்களை உடையது,

புவனம் மூன்றன் பயனாகிப் பொலிவு பெறலால் புகழ்தகைய
புவன சார மெனத்திகழும் புனல்கால் உயிர்தீ இருசுடர்வான்
புவன வடிவாம் நந்தமைநீர் மும்மூர்த் திகளும் பூசித்துப்
புவனம் ஏத்த வைகலின்மும் மூர்த்தி வாச புரமாமால்.     55

     மூவுலகின் பயனாகத் திகழ்தலினாலே ‘புவனசாரம்’ எனவும் ஐம்பெரும்
பூதங்கள் சந்திர சூரியர் ஆன்மா இவற்றைத்திருவுருவாக்கொண்ட எம்மை
நீவிர் மூவிரும் போற்றி செய்து உலகம் போற்ற இங்குறைதலின் மும்மூர்த்தி
வாசபுரம் எனவும் போற்றப் பெறும்.

பரவு மேக வாகனமாங் கற்பத் தெம்மைப் பங்கயக்கண்
வரத ராசன் வழிபடலால் விண்டு புரமாம் வளர்காஞ்சி
புரமா யதுமுன் வகுத்துரைத்தாம் பொல்லாக் கலிதோய் கலியுகத்தும்
விரவா வண்ணம் நல்குதலால் விளங்கும் கலிசித் தெனப்படுமால். 56

     போற்றப் பெறும் மேகவாகன கற்பத்தில் பதுமாக்கன் எனப்பெறும்
விட்டுணு எம்மைப் பூசித்தமையால் ‘விண்டுபுர’மாகும். காஞ்சிபுரம் எனப்
பெறும் காரணத்தை முன்னர் விரித்துரைத்தாம். கொடிய கலித்துன்பம்
கலியுகத்தினும் தீண்டாத் திறலுடைமை வழங்குதலால் ‘கலிசித்து’ எனப்படும்.

கடைநாள் எமக்கீ தாடரங்காம் கவினால் இலய சித்தாகும்
தடைதீர் சகல சித்திகளும் தரலாற் கசல சித்திபுரம்
படையா வாய்மைத் தவம்இயற்றிப் பனிமால் வரையின் வரும் அன்ன
நடையாள் வழுத்தும் பரப்பிரம மயமாம் நகரந் தபோமயமாம்.   57