எனஓர்பால், போத ளாங்குழல் முகிழ்முலைப் பொலந்தொடிப் பூங்கணை மதர்வேற்கண், மாதர் வாணுதற் பசுங்கொடி மணந்தவன் வாய்மலர்ந் தருள்செய்யும். 61 கூறிய அதனைத் திருவுளங் கொண்ட எம்முடைய உள்ளம் மகிழ்ச்சி எழச் செய்யும் காதல் மைந்தர்களே! நுமக்கருளுவோம் என உமையம்மை மணாளனார் அருள்வர். பிள்ளை வண்டினம் முரன்றுபண் பயிற்றிவார்ந் திழிநறாப் பெருவெள்ளங், கொள்ளை கூட்டுணும் மலர்த்தடம் பொதும்பரிற் கொழிதமிழ் மறைப்பாடற், கிள்ளை பாடுசீர்க் காஞ்சியின் என்றும்இக் கிளரொளி இலிங்கத்தே, வெள்ளை வாணகைத் துவர்இதழ் உமையொடும் இனிதுவீற் றிருக்கின்றோம். 62 இள வண்டின் கூட்டம் பண்பாடி ஒழுக்கெடுக்கும் தேனை மிகுதியாகப் பருகும் மலர்ச்சோலையில் தெள்ளி வடித்த தமிழ் வேதப்பாக்களைக் கிளிகள் பாடும் சிறப்பினையுடைய காஞ்சிமா நகர்க்கண் பொங்கொளியுடைய இச்சிவலிங்கத்தே, வெள்ளொளி, தவழும் புன்முறுவலும் பவளம் போலும் இதழ்களும் உடைய உமையம்மையொடும் விளங்கி வீற்றிருக்கின்றோம். எம்மை யாவருங் காணலர் ஒருபொழு தியோகியர்க் கெதிர்காண்பேம். அம்ம நீர் இவண் எம்மடிப் பூசனை அருமறை விதியாற்றான், மும்மை யாகிய உலகமும் படைத்தளித் தழிக்குமா முயல்கிற்பீர், நம்மிடத்துறு பத்தியும் அருச்சனை நலத்தினாற் பெறுவீரால். 63 எம்மை ஒருவரும் அறிகிலர். யோகியர் காணும்படி ஓர்பொழுது தோற்றுவோம். மூவுலகங்களையும் படைக்கவும், காக்கவும், அழிக்கவும், பெறற் பொருட்டு நீவிர் ஈண்டே எம் திருவடிப் பூசனையை நூன் முறைப்படி முயல்வீராமின், நம்மிடத்து உண்டாகும் மெய்யன்பினையும் அருச்சனைப் பயனால் பெறுவீர்களாமின். படைத்தி பங்கயன் அளித்திமால் உருத்திரன் பற்றற உலகெல்லாந், துடைத்தி என்றருள் வழங்கிஇச் சுரிகுழல் தேவியும் எமைஈண்டே, கிடைத்த பேரன்பின் நாள்தொறும் பூசனை யாற்றுக எனக்கேட்டோர், அடைத்த நல்விதி புகல்மறை யாதது வந்தவா றெவன்என்றார். 64 பிரமனே நீ உலகெலாம் படைப்பாய். திருமாலே நீ முற்றவும் காத்தி, இனி, உருத்திரனே நீ அவற்றை முற்றவும் அழித்தி என்றருள் செய்து இத்தேவியும் இவ்விடத்தே வாய்த்த பேரன்பொடும் நாடோறும் பூசனையைப் புரிக’ என்றருளக், கேட்ட மும்மூர்த்திகள் ‘செறித்த நல்விதிகளை உணர்த்துகின்ற வேதம் யாது? அது தோற்றியவாறு எங்ஙனம்?’ எனவினாயினர். |