என்ற மூவருக் கிளநிலா நகைமுகிழ்த் தெம்பிரான் உரைசெய்யும், நன்று கேண்மின்எம் இரவிடைத் திருநடம் நவின்றிருள் புலர்காலை, மன்ற எம்மிடை ஒடுங்கிய உலகுயிர் முழுவதும் வழுவாமே, தொன்று போற்படைத் திடுவது கருதினேம் முத்தொழில் புரிவீர்காள். 65 வினவிய மூவர்க்கும் புன்முறுவலுடன் வாய்மலர்வர். முத்தொழிலைப் புரியும் மூவர்களே! ஒருக்கிய மனத்தொடு கேண்மின்கள்: எமக்கு இரவாகிய சங்கார காலத்தே திருநடம் புரிந்து அறுதியாக எம்மிடத்தே ஒடுங்கிய உலகுயிர்கள் உடம் பெடுத்தற்குரிய காலமாகிய இருளகலும் காலத்தே பிழையாதவாறு பண்டையநிலையிற் படைக்கத் திருவுளங் கொண்டோம். படர்ஒ ளிப்பிழம் பாகும்இவ் விலிங்கமே பற்றிநின் றுலகெல்லாம், உடைய நம்மிடை நிலைபெறு மறைகளை முன்னுற உயிர்ப்பித்தேம், தொடைஇ ணங்கும்அப் பழமறை முழுவதும் நம்மடி தொழு தேத்திக், கடைஇ லாதபே ரன்பினாற் பழிச்சின சிரமிசைக் கரங்கூப்பி, 66 பரவுகின்ற ஒளியுருவாகும் இவ்விலிங்கத்தினை இடனாகக் கொண்டு உலகமுற்றவும் அடிமையாகவும், உடைமையாகவும் உடைய நம்மிடத்து ஒடுங்கிநிற்கும் மறைகளை முதற்கண் தோற்றுவித்தோம். பாவடி வாம்பழைய வேதங்கள் நம்மைத் தொழுது தலையாய பேரன்பினால் சிரமிசைக் கரங் குவித்துத் துதி செய்தன. பாரின் மேயினை பாரொரு வடிவினை பாரினுக் கறியொண்ணாய், பாரும் மற்றைஅப் பாரிடைப் பொருளும்நின் ஆணையிற் பயில்வித்தாய், நீரின் மேயினை நீரொரு வடிவினை நீரினுக் கறியொண்ணாய், நீரும் மற்றைஅந் நீரிடைப் பொருளும்நின் ஆணையின் நிலைப்பித்தாய். 67 ‘‘நிலன் நீர் இவற்றொடு உடனாதலும், ஒன்றாதலும், வேறாதலும் உடையை. அன்றியும், அவற்றையும், அவற்றிடைப் பொருள்களையும் சங்கற்பத்தால் நிற்பித்தனை.,’’ நெருப்பின் மேயினை நெருப்பொரு வடிவினை நெருப்பினுக் கறியொண்ணாய், நெருப்பும் மற்றை அந்நெருப்பிடைப் பொருளும்நின் ஆணையின் நிறுவித்தாய், மருத்தின் மேயினை மருத்தொரு வடிவினை மருத்தினுக் கறியொண்ணாய், மருத்தும் மற்றைஅம் மருத்திடைப் பொருளும்நின் ஆணையின் வதிவித்தாய். 68 ‘நெருப்பொடு காற்றிடை உடனாயும் ஒன்றாயும் வேறாயினை. மேலும், அவற்றையும் அவற்றிடைப் பொருள்களையும் நின்திருவருளால் நிலைபெறுத்தினை.” |