58காஞ்சிப் புராணம்


     நால்வகை நிலை; பைசாசம், மண்டிலம், ஆலீடம், பிரத்தியாலீடம்,
நாம்-அச்சம், ஈறு திரிந்தது.

தொழில் செய்வோர் இருக்கை

கிம்புரி புரசைகள் கிடுகு கூவிரம்
அம்பொனிற் கலனைகுப் பாய மாதிய
வெம்படை எனவும் வேறு வேறுசெய்
பம்பிய வினைஞர்வாழ் இடம்பல் லாயிரம்.     22

     யானைக் கொம்பிலிடும் பூணும், அதன் கழுத்திலிடு கயிறும், தேரின்
மரச்சுற்றும் (சட்டம்), தேர்க் கொடிஞ்சியும், குதிரைமே லிடும் தவிசும்,
கவசமும் கொடிய படைகள் பிறவும் வெவ்வேறு செயல் நெருங்கிய வினை
செய்வோர் வாழ் இடங்கள் பல்லாயிரம் ஆவன.

     வெள்ளிக்குப்பாயம், (காஞ்சி) எனப் பின்வருதலும் காண்க.

நடைநகம் முதலிய உலவும் நாமநீர்ப்
புடைநகர் வளம்இது புகன்றுந் திங்கள்ஏர்
உடைநக மழைநிகர் ஓதி யார்பயில்
இடைநகர் வளம்இனி இயம்ப லுற்றதே.        23

     யானை முதலிய உலவும் அச்சம் தரும் நீர் சூழ்ந்த நகர்ப்புறத்தின்
வளம் இதுவரை கூறினோம். சந்திரனது அழகைக் கெடுக்கின்ற விரல்
நகங்களும், மேகத்தையொத்த கூந்தலும் உடைய மகளிர் குடிகொண்ட
இடைநின்ற நகரின் வளம், இப்பொழுது பேசப்பெறும்.

     நடை நகம்-நடத்தலையுடைய மலை எனவே யானையாயிற்று. புகலுதல்
-விரும்பிச் சொல்லுதல். ‘போரெனிற் புகலும் புனைகழல் மறவர்’ (புறநா-)
என்புழிக் காண்க.

இடைநகர்

அறுசீரடி யாசிரிய விருத்தம்

குடமுலைக் கெதிரென் றோதுங் குரும்பையை வெகுண்டு மின்னார்
பொடிஇடி உலக்கை மீப்போய்ப் புடைத்தன மீளா முன்னம்
முடிமிசை அதிரத் தாக்கிச் சிந்துமுப் புடைக்காய்த் தெங்கீங்
கிடர்இடர்க் கெதிர்செய் வோரின் வியத்தக எங்கும் ஓங்கும்.   24

     தென்னைமரம், குடத்தை ஒத்த கொங்கைக்கு நிகர் என்று புலவர்
கூறும் தென்னங் குரும்பையைச் சீறி மின்போலு மகளிர் வாசனைப்பொடியை
இடிக்கின்ற உலக்கை மேற்சென்று தாக்க அந்த உலக்கை மீளுமுன்பே அவர்
அதிர்ச்சி அடையும்படி முடிமேல் தாக்கித் தேங்காயை உதிர்க்கும்.
இந்நிலவுலகில் துன்பம் செய்வோர்க்கு எதிரே துன்பம் செய்வோரைப் போல
எவ்விடங்களிலும் வியப்புற மிக்கு விளங்கும்.