விண்ணின் மேயினை விண்ணொரு வடிவினை விண்ணினுக் கறியொண்ணாய், விண்ணும் மற்றைஅவ் விண்ணிடைப் பொருளும்நின் ஆணையி னிறுவித்தாய், கண்ணும் ஆருயிர் இருசுடர் எவற்றினும் இம்முறை கலந்தோங்கி, எண்ணினால்அறி வரும்பெரு முதல்வநின் இணையடி மலர்போற்றி. 69 ‘‘வாளிடை ஒன்றாய் வேறாய் உடனாகி அதனையும், அதனிடைப் பொருள்களையும் நின் ஆற்றலால் நிறுத்தினை. கருதப்படும் ஆன்மாக்கள், சந்திர சூரியர் முதலாம் எவற்றினும் இவ்வாறே கலந்துயர்ந்து எண்ணத்தால் அறிவரிய முழுமுதலே நின் துணைத்தாள்மலர் காப்பதாக.’ கலி விருத்தம் இன்ன வண்ணம் பழிச்சி எமைத்தொழும் மன்னும் அன்பின் மறைகளை நோக்கிநீர் நன்னர் வேட்டன நல்குதும் வேதங்காள் சொன்மின் என்றலுஞ் சொல்லுத லுற்றன. 70 | இவ்வாறெம்மைத் தொழுது துதிக்கும் மெய் யன்பினையுடைய வேதங்களை நோக்கி வேதங்களே! நீவிர் விரும்பிய நன்மைகளை வழங்குதும் சொல்லுக’’ என்ற அளவிலே கூறத்தொடங்கின. எந்தை நின்முகத் தெங்களை ஈன்றனை அந்த மெய்ப்பெரும் பேறுடை எங்களைச் சிந்தை செய்து திருவருள் வைத்துநின் சந்த மேனி அணியெனத் தாங்குவாய். 71 | எமக்குத் தந்தையே! நின் திரு முகத்தினின்றும் எம்மைத் தோற்று வித்தனை, அப்பெரும் பாக்கிய முடைய எங்களைத் திருவுளம் பற்றி அழகிய திருமேனியில் அணியாகப் பூண்டு கொள்வாய். நயக்கு மாறினி நாங்கள் உலகிடைச் செயத்த கும்பணி செப்புதி மற்றெமை வியப்ப வேதங்கள் என்று விளித்தனை உயர்த்த அப்பெயர்க் காரணம் ஓர்கிலேம் 72 | ‘‘விரும்புமாறு உலகில் யாங்கள் செயத்தக்க தொண்டினைப் பணித்தி. அதிசயிக்குமாறு எம்மை வேதங்களே! என்றழைத்தனை. சிறப்பித்த அப்பெயர் பொருளை அறிகிலோம்,” என்ற மாமறை தம்மை இயல்பினால் அன்று கோவணம் நூபுர மாதியா மன்ற மெய்யணி யாக்கி மகிழ்ந்துபின் ஒன்று கூறினம் ஊங்கிவை கேட்பவே 73 | வேண்டிய மறைகளைக் கருணையினால் அந்நாள் கோவணம், சிலம்பு முதலாம் திருமேனி அணிகளாக அறுதியாக ஆக்கி மகிழ்ந்து பின்பு அவை உணருமா றொன்றைக் கூறினோம். |