திருவேகம்பப் படலம் 585


     அழகுமிகும் காஞ்சியில் எல்லா வேண்டுகோளையும் பல்லுயிர்க்கும்
உதவுதற் பொருட்டு நமது பெருமானார் பூசனையை ஏற்றுக்கொண்டு
மூவர்க்கும் முறையே வரங்களை வழங்கினர்.

இறைவி வேண்டுகோள்

இறைவிஇம் மாநிழல் இனிது வைகிய
மறைமுதல் அடியிணை வழிபட் டேத்துபு
நிறைபெரு மகிழ்ச்சியின் நீடு காதலாற்
குறைவறு வரம்பல குறித்து வேண்டுவாள்.         91

     பெருமாட்டியார் மா நீழலில் வீற்றிருக்கும் வேத முதல்வரை வணங்கி
ஏத்தி நிறைந்த பெருமகிழ்ச்சியிற் றங்கிய மெய்யன்பினால் நிறைவுறு வரம்
பலவும் திருவுள்ளம் கொண்டு வேண்டுவார்.

மேற்படி வேறு

வேதக் கோவண வேதப் புரவிய
வேதப் பூணவ வேத முதல்வனே
வேதத் தானும் உணர்வரு மேதகாய்
வேதச் செல்வஎன் விண்ணப்பங் கேள்மதி.        92

     வேதத்தைக் கோவணமாகவும், குதிரைகளாகவும், அணிகளாகவும்,
கொண்ட வேதநாயகனே! வேதத்தாலும் அறிவறிய பெருந்தகையே! வேதப்
பொருளே! என் வேண்டுகோளை ஏற்றருள்க.

மன்ற லார்மறை மானுவின் அடித்தலத்
தென்றும் மேவுதி யேனுமி யோகியர்க்
கன்றித் தோன்றிலை யாயினை ஈண்டினி
மன்ற யாவர்க்குங் காட்சி வழங்குவாய்.           93

     மணமும், மங்கலமும் உடைய வேதமா மரத்தின் மூலத்தில் என்றும்
வீற்றிருப்பை ஆயினும் யோகியர்க்குக் காட்சி தருகின்றனை. பிறர்க்கு
அரியை ஆகின்றாய். இங் கினித் தெளிவாக யாவர்க்கும் திருக்காட்சி
வழங்குவாய்.

தெள்ளு தீம்புனல் இத்திருக் கம்பையும்
வள்ளல் ஓரிடைக் காண்டக மன்னுகென்
றொள்ளி ழைக்கிரி உத்தமி வேண்டலும்
பிள்ளை வெண்பிறைக் கண்ணியன் பேசுமால்.      94

     தெள்ளிய இனிய தீர்த்தமாகிய கம்பாநதியும் வள்ளலே! ஒப்பற்ற
இத்தலத்திற் புலப்பட மன்னுக என்றிமயவல்லி வேண்டிய அளவிலே
இளம்பிறை சூடிய பெருமானார் மறுமாற்றம் அளிப்பர்.

இறைவன் கூறல்

மேற்படி வேறு

மன்னுயிர் முழுவதும் பயந்த மாணிழாய்
அன்னவை உய்யுமா கருதி அன்பினால்