திருநகரப் படலம் 59


கோல்வளை கறங்கக் கொங்கை அசைதரக் குலையக் கூந்தல்
மேல்அணி கலக லென்ன வியர்வெழ உயிர்ப்பு நீள
வால்வரிப் புனைபந் தாடு மாதரார் செயல்காண் தோறுங்
கால்வரி கழலி னார்க்குக் காமம்மீக் கூரும் மாதோ.      25

     திரட்சியையுடைய வளைகள் ஒலிக்கவும், கொங்கை அசைதரவும், கூந்தல்
சோரவும், மேன்மை அமைந்த அணிகலன்கள் ‘கல் கல்’ என்றொலிப்பவும்,
வியர்வை அரும்பவும், நெட்டுயிர்ப் பெறியவும் வெண்ணிறம் வாய்ந்த நூலாற்
கட்டி அழகு செய்யப்பெற்ற பந்தினை ஆடு மகளிர்தம் செயல் திறனைக்
காணுந்தோறும் கழலை யணிந்த வீரர்க்குக் காமம் மேன்மேல் எழும்.
‘வரிப்புனை பந்தொடு’ (திருமுரு-68-).

தமதுரு நிறத்தை வவ்வுந் தருக்கறிந் தொறுப்பார் போலத்
தமனியந் தகர்த்த சுண்ணம் ஒருவர்மேல் ஒருவர் வீசத்
தமனியச் சுண்ணம் எங்கும் பரந்தன தவழ்த லாலே
தமனிய உலகந் தன்னை அசிப்பன தடந்தேர் வீதி.      26

     தம்முடைய வடிவின் நிறத்தைக் கவர்ந்தமையால் தோன்றிய
செருக்கினை அறிந்து தண்டிப்பவர்போலப் பொன்னைப் பொடித்து
அச்சுண்ணத்தை ஒருவர்மேலொருவர் மாறி மாறித் தூவ அப்பொற்பொடி
எங்கும் பரந்து ஒளி தவழ்தலினால் பொன்னுலகை நோக்கித் தேர்
செலற்குரிய அரச வீதிகள் எள்ளி நகுவன.

     அசிப்பு-பரிகாசச் சிரிப்பு. ‘அசிப்ப ஆரியங்கள் ஓதும்’ (திருவிசை)

எரிமணி சோதி கால இருள்வர வறியா மாடத்
தரிவையர் கூந்தல் ஊட்டும் அகிற்புகை நாகத் தெய்திப்
பெரிதிருள் விளைப்ப நோக்கும் பெற்றியோர் தட்டுமாறா
மரீஇயின உலகம் என்னே யெனமனம் மருள்வர் அம்மா.   27

     தீயொக்கும் ஒளியுடைய மணி, சுடரை உமிழ்தலால் இருள் வருதலை
அறியாத மாடங்களில் மகளிர்கள் கூந்தலில் ஈரம் புலர ஊட்டும் அகிலினது
புகை விண்ணுலகை அடைந்து பெரிதும் இருளைச்செய்ய அதனை நோக்கும்
இயல்பினோர் ஆகிய தேவர்கள் விண்ணுலகும் மண்ணுலகும் நிலைமாறினது
யாது காரணமென மனமயங்குவார்கள்.

     தேவர்கள் மருளுதல்; எவர்கொல் பண்ணவர்கள் எவர்கொல்
மண்ணவர்கள், எதுகொல் பொன்னுல கெனத்தட்டு மாறவும்’
(மீனாட்.பிள்.காப்.11) தட்டுமாற- தடுமாற; அம்மா; வியப்பிடைச் சொல்.

அகழி

மாற்றவள் பூசை ஆற்றி வரம்பெறு முறைமை கேளா
ஏற்றமார் கங்கை யாளுங் கம்பர்பால் வரத்திற் கெய்திச்
சாற்றருங் கச்சி மூதூர் வலங்கொளுந் தகைமைத் தாய
ஆற்றல்சால் அகழி ஆழம் அகலம்ஆர் அளக்க வல்லார்.   28