598காஞ்சிப் புராணம்


உலகெலாம் உய்யு மாற்றால் உவளகத் தைந்து மூன்றாச்
சிலதியர் அடுக்கி யிட்ட செழுந்தவி சணையின் மன்னி
விலகரு மகிழ்ச்சி மீதூர் திருவிளை யாடற் செய்கைக்
கலவியின் நயந்து தம்முட் களித்தினி திருக்கும் ஏல்வை   21

     உலகம் முற்றவும் பிழைக்குமாறு அந்தப் புரத்தில் ஐந்தாகவும்
மூன்றாகவும், பாங்கியர் அடுக்கிய வளமுடைய அணையில் இருந்து பெரு
மகிழ்ச்சி தலை சிறப்பத் திருவிளையாட்டால் கலத்தலில் திருவுளம் வைத்து
உவந்திருக்கும் பொழுதில்,

கலிநிலைத் துறை

மும்மைப்புவ னங்களுஞ் செய்தவப் பேறு முற்றச்
சும்மைத்திரை நீருடை மேதினி தோற்றம் எய்தச்
செம்மைத்திசை எட்டினுந் தென்றிசை மிக்கு வெல்ல
மம்மர்த்தொகை நூறிய வண்டமிழ் நாடு வாழ        22

     மூவுலகோரும் செய்த தவப் பயன் வாய்ப்பவும், கடலை ஆடையாக
வுடைய நிலமகள் புகழ் மிகவும், திசை எட்டினும் தென் திசையே
மேம்படவும், மயக்கக் குழாத்தைக் கெடுத்த வண்டமிழ் நாடு வாழவும்,

நலம்மன்னிய தண்டக நாடு செழித்து மல்கப்
பலரும்புகழ் காஞ்சி வளம்பதி மேன்மை சாலக்
குலவுஞ்சம யங்களொ ராறும் மகிழ்ச்சிகூர
உலகெங்கணும் வைதிக சைவம் உயர்ந்து மன்ன.     23

     தண்டகன் ஆண்ட தொண்டை நாடும், பல சமயத்தவரானும்
புகழப்படும் காஞ்சிமா நகரும் பெருஞ் சிறப்புறவும், அகச்சமயங்கள் ஆறும்
மகிழ்ச்சி மிகவும், உலகில் எங்கும் சிவாகம வேதவிதிச் சிவநெறி சிறக்கவும்,

எவ்வெத்தவத் துஞ்சிவ பூசனை ஏற்றம் என்னப்
பௌவப்புனல் சூழ்படி மேலவர் தேறி உய்யத்
தெவ்வுத்தொழில் பூணும் அறக்கடை தேய நல்கூர்
எவ்வத்திறம் நீங்கி உயிர்ப்பயிர் எங்கும் ஓங்க.      24

     எவ்வகைத்தாய தவத்தினும் சிவ பூசனை ஏற்றம் உடைத்தென்று கடல்
சூழ்ந்துள்ள உலகவர் தெளிந்து உய்யவும், பகைமையாகிய பாவம் தேயவும்,
வறுமையாகிய துன்பப் பகுதியினின்றும் நீங்கி உயிராகிய பயிர்கள் யாண்டும்
தழைக்கவும்,

முப்பான்முத லிட்ட இரண்டற முந்த ழைப்ப
எப்பால்உல கத்தொளி யாவையும் எம்பி ரானார்
தப்பாவிழி யின்னொளிச் சால்பென யாருங் காண
அப்பார்சடை யார்அடித் தொண்டர் அகங்க ளிப்ப.   25