60காஞ்சிப் புராணம்


     தனக்கு மாற்றவளாகிய உமையம்மை பூசனையைச் செய்து வரம்பெற்ற
முறைமையைக் கேள்வியுற்று உயர்ச்சியமைந்த கங்கை மாது திருவேகம்பப்
பெருமானிடத்துத் தானும் வரம்பெற அடைந்து புகழ்தற்கரிய காஞ்சி என்னும்
பழம்பெரும் பதியை வலங்கொள்ளும் இயல்பினதாகிய வலிமை மிக்க
அகழியின் ஆழத்தையும் அகலத்தையும் யாவர் அளந்து கூறவல்லவர்.

நெடிபடு பொதும்பர் சூழ நிரைதிரைக் கரத்தாற் செம்பொன்
தடமதில் பொதியப் புல்லுந் தண்கிடங் கிறைவர் ஏவக்
கடல்களே வளைய நோக்கிக் கம்பரை இறுகப் புல்லுஞ்
சுடர்மணிக் கங்கை மானுந் துளித்தநீர் தழும்பு மானும்.   29

     வண்டுகள் செறிந்த சோலைகள் மருங்குசூழ வரிசைபெற எழுந்த
திரையாகிய கைகளால் சிவந்த பொன்னாலாகிய பெரிய மதில்களை இறுகத்
தழுவும் குளிர்ந்த நீர்க்கிடங்கு, திருவேகம்பப் பெருமான் கங்கையைப்
பிரிந்திருத்தலால் வருந் துன்பத்தைப் பொறாமல் கடல்களையே ஏவ அவை
வந்து சூழ்தலை நோக்கிக் கம்பரை இறுகத் தழுவும் மணி அணி கொண்ட
கங்கையை ஒக்கும். அவ்வகழி மதில்மேற் றுளித்த நீர் தழும்பினை ஒக்கும்.

திரைஎறி தரளம் பாங்கர்த் திரண்டுவால் ஒளிகள் வீசிக்
குரைபுனல் குளிக்கும் வேழக் குழாத்தைவெண் கயமாச் செய்யக்
கரைமிசைக் காண்போர் என்னே இம்மையே கடவுள் தன்மை
புரைதபத் தரும்இத் தீர்த்தம் எனஇறும் பூதுகொள்வார்.    30

     திரைக்கரங்கள் எடுத்து வீசும் முத்துக்கள் பக்கங்களிற் செறிந்து
வெள்ளிய கதிர்களை வீசி நீரில் மூழ்கி எழும் கரிய யானைகளை வெள்ளை
யானைகளாகச் செய்தலால், கரையில் நின்று காண்போர் மூழ்கிய மாத்திரையே
இப்பிறப்பிலே தெய்வத் தன்மையைக் குற்றந் தீரத் தரும். இத்தீர்த்தத்தின்
சிறப்பு ‘என்னே’ என வியப்புறுவார். கைமேற் பயன் தரும் தீர்த்தமென்பது
குறிப்பு. ‘பின்னை என்னா தருள் செய்வார்’ (திருஞா.)

கடம்படு களிநல் யானை குண்டகழ் கலக்கிக் கொட்பத்
தடங்கரை யேறற் கார்த்துத் தாள்தொடர் பிணித்துப் பாகர்
இடம்பட இருபால் ஈர்ப்ப இருங்கடல் அமுதம் உண்ணத்
தொடங்குநாள் சிலம்பு நட்டுச் சுராசுரர் கடைதல் மான.   31

     மதநீர் பெருகுகின்ற செருக்கினையுடைய உத்தம இலக்கணமமைந்த
யானை ஆழ்ந்த அகழியைக் கலக்கிச் சுழலுதலால், பெரிய கரைமேல் ஏறுதற்கு
ஆரவாரித்து சங்கிலியைப்பூட்டிப் பாகர் இருமருங்கும் நின்று இழுத்தல்,
திருப்பாற்கடலில் அமுதம் பெற முயன்ற நாளில் மந்தரமலையை நட்டுச்
சுரரும் அசுரரும் கடைதலை ஒத்து விளங்கும்.