602காஞ்சிப் புராணம்


கலிநிலைத் துறை

வில்லிழை பூண்டிறு மாந்தெழு கொங்கை விரைக்கோதாய்
அல்லன செய்துபின் அஞ்சுப வர்க்குறு கழுவாய்தாம்
நல்லற நூல்களின் மாதவர் நாட்டினர் அவையெல்லாஞ்
சொல்லிய தீர்வு மிகச்சிறு மைத்திது துணிவாயால்.     38

     ஒளிவிடும் அணிகளையும், சாயாத கொங்கைகளையும், மணங்கமழும்
மலரணிந்த கூந்தலையும் உடையோய்!  பாவங்களைச் செய்து பின்
அஞ்சுபவர்க்குப் பொருந்திய தீர்வுகளை நல்லற நூல்களில் பெருந்தவர்
வலியுறுத்தி உள்ளனர். அவையாவும் மிகவும் சிறுமையை யுடையன.
அவற்றை மனங்கொள்.

எத்துணை வன்மை அறக்கடை முற்றும் இறச்செய்யும்
அத்தகு சீர்க்கழு வாய்எமை அன்பின் அருச்சித்தல்
சித்தம் ஒருக்கி நினைத்தல் பழிச்சுதல் பேர்செப்பல்
பத்தியின் எம்அடி யார்வழி பாடெனும் இவையாமால்.  39

     எத்துணை வலிமையுடைய பாவத்தையும் முழுதும் போக்கும்
சிறப்பினையுடைய பிராயச்சித்தம் யாவை எனிற் கூறுவோம். எம்மை
அன்போடும் அருச்சனை செய்தலும், மனம் ஒன்றித் தியானித்தலும்,
துதி செய்தலும், திருநாமத்தைக் கணித்தலும், மெய்யன்பொடும் மாகேசுவர
பூசனை  புரிதலும் ஆகும்.

முற்றிய சீர்இரு முப்பரு வங்களும் முறையானே
அற்றமில் கால மெனப்படும் யாம்பெரி தானந்தம்
உற்றுறை கின்ற இடங்கள் இடங்கள்எம் உறும்அன்பர்
பற்றிய தானமும் அத்தகை மைத்தென அறிபாவாய்.    40

     பாவையே! சிறப்புமிக்க விடியல் முதலிய ஆறு காலங்களும் குற்றமற்ற
காலங்கள் எனப்படும். யாம் விரும்பியுறையும் இடங்களும், எம்மைக் கூடிய
மெய்யன்பர்கள் உறையும் இருக்கைகளும் அத்தகு சிறப்புடையன என
அறிவாயாக.

ஆதலின் நாம்உறை வைப்பிடை யாயினும் எம்அன்பர்
மேதக வைகும் வரைப்பிடை யாயினும் மீப்பொங்குங்
காதலி னால்எமை அர்ச்சனை யாற்றுதி இதுகாணூஉப்
பாதலம் மண்ணகல் விண்ணகம் உய்வது பண்பென்றார்.   41

     ஆகலின், யாம் உறையும் இடங்களி லாயினும் அன்றி மெய்யடியார்
மேவும் தலங்களி லாயினும் பேரன்பொடும் எம்மை அருச்சனை செய்.
அதனைக் கண்டு விண்ணவரும் மண்ணவரும் கடைப்பிடித்து உய்வர் என
அருளினர்.

என்றலும் அங்கணர் பங்கய பாதம் இறைஞ்சித்தாழ்ந்
தொன்றிய சிந்தையின் ஆளுடை நாயகி உரைசெய்வாள்.