யோக தீட்சை, ஒளத்திரி தீட்சை எனப்பெறும். எழுவகையுள் அவுத்திரி, ஞானவதி கிரியாவதி என இரண்டாய் ஒரோ வொன்று சமயம், விசேடம், நிருவாணம் என முத்திறப்படும். மருவுபுறம் அகமென்னும் மதத்துழன்று வருணநிலை வழாது நின்று, மிருதிமறை நெறிவேள்வி பலபுரிந்து வேதாந்தப் பொருண்மை தேறி, வருமுறையான் இவையனைத்தும் முற்றியபின் மேல்நோக்கும் மதியான் மிக்கோர், தெருளுதவு சைவநெறிப் படுஞ்சமய தீக்கைதனக் குரிய ராவர். 54 புறச்சமய நெறிநின்று அகச் சமயம் புகுந்து தத்தம் வருணத்திற்குப் பொருந்த ஒழுகி ஸ்மிருதி வழி ஒழுகி வேத விதிப்படி யாகங்களியற்றி வேதங்களாகிய உபநிடதப் பொருள்களை உள்ளவாறு துணிந்து வருஞ் சிறப்பினால் யாவும் முதிர்ந்த அந்நிலையில் மேம்படு நிலையை நாடும் அறிவான் மிக்கவர் மெய்யறிவை வழங்கும் சிவநெறியில் புகப்பெறும் சமய தீக்கை பெறற் குரிமை உடையவராவர். சரியாபாதமும் அதன்பயனும் அவ்வாற்றா ன்யாமருவும் திருக்கோயில் அலகிடுதல் மெழுகல் அன்பின், செவ்வாற்றான் மலர்கொய்து தார்மாலை தொடுத்தணிதல் தீபம் ஏற்றல், மெய்வாய்ப்பச் சிவனடியார் பணித்தபணி தலைநின்று மேவ லாதி, இவ்வாற்றில் தாதநெறிச் சரியையினைப் புரிவோர்எம் உலகின் வாழ்வார். 55 இங்ஙனம் சமயதீக்கை பெற்று யாம் வீற்றிருக்கும் திருக்கோயில்களில் விளக்குமாறு கொண்டு தூய்மை செய்தலும், மெழுகுதலும், அன்பொடும் விதிவழி மலர் கொய்தலும், மாலைகள் புனைதலும், அணிவித்தலும், தீபமிடலும், மெய்யறிவு பெறச் சிவனடியார் ஏவல் வழி நிற்றலும் ஆகிய இம் முறையால் அடிமை நெறியாம் சரியையினைப் புரிந்தோர் சாலோகம் எய்துவர். கிரியாபாதமும் அதன்பயனும் ஈதியற்றி முற்றியபின் மகநெறிக்காம் விசேடத்தை எய்திப் பூசைக், கோதியகொண் டாதார சத்திமுதல் சத்திஈ றோங்கு கஞ்சத், தாதனமே மூர்த்திமுதல் பாவித்தா வாகித்தா வரணபூசை, ஆதியசெய் தழலோம்பும் இக்கிரியை வழாதார்எம் அருகுவாழ்வார். 56 சரியையை முற்ற முடித்துச் சற்புத்திர மார்க்கத்தை அனுட்டித்தற்கு வேண்டும் விசேட தீட்சையைப் பெற்று அகப் பூசை புறப்பூசைக்கு வேண்டும் பொருள்களைக் கொண்டு மூலாதார சத்தியாகிய நில முதல் சத்தி தத்துவம் ஈறாக அமைந்த தாமரை மலர் மேல் ஆசனம், மூர்த்தி, மூர்த்திமான் தம்மைக் கருதி எழுந்தருளுவித்துப் பிராகார பூசை முதலியனவும் புரிந்து எரி யோம்புதலையும் புரிந்த கிரியையில் பிறழாதார் சாமீப பதமுத்தியை எய்துவர். |