தழுவக் குழைந்த படலம் 607


யோகபாதமும் அதன்பயனும்

     இக்கிரியை முற்றியபின் இயமாதி எட்டுறுப்பின் இயல்பு
வாய்ந்து, பக்கவளி தனைஅடக்கி நடுநாடி உறப்பயிற்சி ஆறாதாரந்,
தொக்கபொரு ளுணர்ந்தேகி மதிவரைப்பின் அமுதுண்டு சோதி
உள்ளால், புக்கழுந்துஞ் சகமார்க்க யோகுழப்போர் எம்உருவம்
பொருந்தி வாழ்வார்.                                      57

     கிரியை முற்றுப் பெற்ற நிலையில் இயமம் நியமம் ஆகிய வாய்க்கப்
பெற்று இடைகலை பிங்கலையில் ஓடும் காற்றைச் சுழுமுனையில் நிறுத்தி
ஆறாதாரங்களில் விளங்குகின்ற விநாயகர் முதலாம் தெய்வத் திருவருள்
கிடைத்துப் போய்ச் சந்திர மண்டலத்தில் அமுதத்தை உண்டு சுடர் விடும்
சோதியுள் மூழ்கித் திளைப்பவர் தோழ நெறியில் யோக முயல்பவர் சாரூபம்
பெற்றுவாழ்வார்.

ஞானபாதமும் அதன்பயனும்

     முறையானே இம்மூன்றும் முற்றி அருள் பதிந்துவினை
ஒப்புவாய்ந்து, நிறைவாய பருவத்தின் உயிர்க்குயிராய் நின்றருளும்
யாமே தோன்றி, மறைவாய்மை நிருவாண விதியாற்றால் வழிஆறும்
தூய்மை செய்து, குறையாத பேரருளின் அறிவுறுக்கும் அஞ்செழுத்தின்
கொள்கை தேற்றி.                                        58

     முறையாக இம்மூன்றனையும் முடித்துத் திருவருள் வீழ்ச்சி
(சத்திநிபாதம்)யால் இருவினை ஒப்புத் தோன்றி மல பரிபாகத்தால்
உயிர்க்குயிராய் நின் றருள் செய்யும் யாமே (பிறரல்லர்) குருவடிவில்
வெளிப்பட்டு வேத விதிப்படி நிருவாண தீக்கை வழி ஆறத்துவாக்களையும்
சோதித்துத் தூய்மை செய்து பரிபூரணமாம் பேரருளினால் செவி
அறிவுறுக்கும் அஞ்செழுத்தின் வழி நிற்கு முறை ஓது முறை இரண்டனையும்
ஒன்று படுத்தித் தெளிவித்து,

     அருவுருவங் குறிகுணங்கள் முதல்ஈறு கட்டுவீ டனைத்தும்
இன்றிப், பெருமையதாய் நுண்ணியதாய்ப் பேருணர்வாய் ஆனந்தப்
பிழம்பாய் எங்கும், ஒருமுதலாய் அழிவின்றி ஓங்கொளியாய்
நிறைந்துளதாய் உயிர்கள் தோறும், விரவியுடன் தொழிற் படுத்துப்
புலங்கொளுத்தி வீடுய்க்கும் பதியாம் எம்மை.                  59

     மூவகை வடிவமும், குறியும், குணங்களும், ஆதியும், அந்தமும்,
பந்தமும், வீடு ஆகிய யாவும் இல்லையாய்ப் பெருமையும், நுண்மையும்
பேருணர்வும், ஆனந்தப் பெருக்கும், ஆய் எங்கும் ஒப்பற்ற முதற்
பொருளாய் அழிவுறாது ஓங்கும் ஒளியாய், எவற்றினும் வியாபித்துள்ள தாய்
ஆன்மாக்கள் தோறும் ஒன்றாய் வேறாய் உடனாகித் தொழிலிற் செலுத்தி
மெய்யறிவு கொளச் செய்து முத்தியிற் செலுத்தும் பசுபதியாம் எம்மை’