தழுவக் குழைந்த படலம் 609


     ‘காட்சிப் பொருள், காண்பான், காட்சி எனப்பெறும் ஞேயம், ஞாதுரு,
ஞானம் என்னும் இப்பிரிவு ஒழியாதொழிந்து சூரிய கிரணம் கலந்த கண்ணும்,
நீரும் அதனிடை நிழலும், தீயும் அதனாற் பற்றப்பட்ட இரும்பும், நீரும்
கலந்த உப்பும், சூரியனும் ஒளி மடங்கிய விண்மீன்களும் ஒப்ப இரண்டற்ற
கலப்பினால் எம்முடனாகிப் பேரின்பத்தை நுகர்ந்து உடன் வாழ்வார்,
மணமுடைய மலர்க் கொத்துக்களை முடித்த கூந்தலையுடையோய்! அவர்
வடிவமே எமக்கு இனிய திருக்கோயிலாகும்.’ இம் முத்தியை ஒன்றி ஒன்றா
நிலை என்ப.

     முத்திமுடி பிதுகண்டாய் முன்இயம்பு மூன்றும்முத்திப் பதங்க
ளாகும், இத்தகைய முத்திகளை இம்முறையான் முயன்றவரே எய்தற்
பாலார், அத்தகைய வலியில்லோர் எளிதாக வீடுபே றடைவான்
எண்ணி, வைத்தபெருங் கருணையினான் மேதினிமேற் பலதானம்
வயங்கச் செய்தேம்.                                      64

     முடிபாகச் சொல்லப்படும் முத்தியாகும் இது, முன்னம் மொழிந்த
மூன்றும் பத முத்திகளாகும், இவ்வியல்புடைய முத்திகளை இங்குக் கூறப்
பெறும் சாதனங்களான் முயன்றவரே அடைதற் குரிமை உடையார்,
இவ்வுபாயத்தான் முடிக்கும் வன்மை யில்லாதவர் எளிதாக வீடுபேற்றினை
அடைவான் உளங்கொண்டு பெருங்கருணை வைத்து உலகிற் பல தலங்கள்
விளங்கும்படி வைத்தோம்.

     அங்கவற்றில் வதிவோர்கள் முயலாதெம் உலகாதி பதங்கள்
சேர்வர், கொங்குயிர்த்த மலர்க்குழலாய் அவற்றுள்ளும் குருமாடக்
காசி வைப்பில், தாங்குபவர் எம்உருவந் தனைப்பெறுவர்
திருக்காஞ்சித் தலத்தில் வாழ்வார், மங்கரிய மலந்துமித்து நம்முடனும்
பேரின்ப வாழ்வு சேர்வார்.                                65

     ‘அத்தலங்களில் உறைவோர் முயற்சி சிறிதும் இன்றிச் சாலோக சாமீப
பதங்களைப் பெறுவர். மணம் கமழும் மலரணிந்த கூந்தலை யுடையோய்!
அத்தலங்களிலும் நிறமுடைய மணிபதித்த மாடங்கள் சூழ்ந்த காசியில்
வைகுவோர் எம்முடைய சாரூபத்தைப் பெறுவர். திருக் காஞ்சியில் வாழ்பவர்
கெடாத ஆணவ வலியைக்கெடுத்துச் சாயுச்சியம் பெறுவர்.’

     எம்முலகத் துறைவதனில் எம்அணிமைக் கண்ணமர்தல் ஏற்ற
மாகும், எம்முருவந் தனைப்பெறுதல் அதற்கதிகம் அதற்கதிகம் இறவா
இன்பத், தெம்முடனாய் ஒற்றித்தல் இம்முறையால் வதிவோர்கள்
எவர்க்கும் மாறா, தெம்முடனாம் பேறளிக்குங் காஞ்சி எவற்
றினுமதிகம் என்னத் தேறாய்.                              66

     ‘கயிலையில் உறைதல், இறைவனை அடுத்திருத்தல், இறைவன் வடிவம்
பெறல். இரண்டறக் கலத்தல் இவை ஒன்றற்கொன்று ஏற்றமுடைத்தாம்;
இத்திறனால் உறைபவர் யாவர்க்கும் அடிசேர் முத்தியை வழங்கும் காஞ்சி
எத்தலங்களிலும் சிறப்புடைத்து என்று தெளிவாயாக.’