மறைமுடிவும் இவ்வாறே வீடுதவும் வளநகரம் காஞ்சி என்ன, அறைதருமால் அன்னதூஉம் வகுத்துரைப்பக் கேட்டியென அருளிச் செய்வார், மிறைபுரியுந் தக்கனார் வேள்வியகத் திமையவர்தம் மேனி முற்றும், குறைபடுத்துத் துகைத்துழக்கிச் சவட்டியபின் இரங்கியருள் கொடுக்க வல்லார். 67 ‘வேதமுடிபும் இங்ஙனமே முத்தி வழங்கும் வளமுடைய நகரம் காஞ்சி என்றே கூறும். ஆதலின், அதனையும் வகைப்படுத்திச் சொல்லக் கேட்டி’ என்று குற்றத்தைச் செய்யுந் தக்கன் செய்த யாகத்தில் உடன்பட்ட குற்றத்தையுடைய தேவர்கள் தம் உறுப்புக்களைச் சிதைத்தும், தடிந்தும், வருத்திய பின்னர் இரங்கித் திருவருளைப் புரிந்த செல்வர் வாய்மலர்வர். கேசாந்த முத்தி தன்னிகரில் கேசாந்தம் உறும்ஆவி தன்சிரத்துக் கபாலம் கீறி, வன்னியினில் பூவெனப்போய் வாயுவினில் புவவெனப்போய் இரவிமாட்டுப், பின்னம்அறு சுவவெனப்போய் விண்அரசின் மகவெனப்போய்ப் பிரமத் தொன்றாய், மன்னிடும்இக் கேசாந்த முத்தியினை எவ்வுயிர்க்கும் வழங்கும் காஞ்சி, 68 தனக்கு ஒப்பில்லாத கேசாந்த முத்தியைப் பெறற் குரிய பருவம் வந்த உயிரானது அக்கினி மண்டலத்தில் பூஃ எனவும், வாயு மண்டலத்தில் புவஃ எனவும், சூரிய மண்டலத்தில் ஸ்வஃ எனவும், இந்திரலோகத்தில் மஹஃ எனவும் போய்ப் பிரமத்தினிடத்தில் ஒன்றாய் நிலைபெறும் இக்கேசாந்த முத்தியினைக் காஞ்சி தன்கண் வாழ் பல்லுயிர்க்கும் எளிதில் வழங்கும். கவ்வெனச்சொல் விதிக்கீசன் ஆயஎமைக் கேசன்எனக் கழறும் வேதம், எவ்விடத்தில் ஆருயிர்கள் எம்போல அந்தத்தை எய்தா நிற்கும், அவ்விடத்தில் அதுமுத்தி கேசாந்த முத்தியெனப் படுமால் அந்தச், செவ்விடமும் நமக்கென்றும் அரசிருக்கை எனத்திகழும் காஞ்சி மூதூர். 69 ‘க’ என்னும் சொற்பொருளாகிய பிரமனுக்கு ஈசன் ஆகிய எம்மைக் கேசன் என்று வேதம் கூறும். எத்தலத்தில் வாழ்ந்தமை காரணமாக உயிர்கள் யாவும் எம்மிடத்தில் அந்தத்தையடையும். அவ்விடத்தில் அம்முத்தி கேசாந்த முத்தியெனப்படும். காஞ்சியாகிய அந்தச் செவ்விய இடமும் நமக்கு எந்நாளும் அரசு வீற்றிருக்கும் இடமாகத் திகழும். க+ஈசன்=கேசன்; பிரமனுக் கீசன் இறைவன். இன்னும்ஒரு வாறியம்பக் கேண்மதிநீ கம்மென்றல் சிரமாம் அந்தச், சென்னிமிசைச் சயனம்உறு வதுகேசம் அதுதனைஅஞ் சித்தல் காஞ்சி, அன்னதனால் காஞ்சியொடு கேசம்ஒரு பொருட்கிளவியாகும் தேம்பு, மின்னிடையாய் கேசாந்தம் ஆவதுமே தகுகாஞ்சி அந்த மாமால். 70 |