தன்னிடக் குறங்கினிற் சார்த்தித் துஞ்சுவ தென்னநெட் டுயிர்ப்பினிற் சிமிழ்த்த தேந்திழாய் 87 | ஏந்திய அணிகளையுடைய உமையே! தனக்கெதிரே இகழ்ந்து இறுமாக்கும் அக்கருடனின் இழிநிலையை மனங்கொண்டு விரையத் தனது தலையை இடது துடையினிற் சார்த்தித் துயிலுதல் போன்று பெருமூச்சினிற் பிணித்தது. மாயவன் எம்மடி வணங்கி அன்பினான் ஆயிடை நெடும்பொழு தமர்ந்து வைகினான் பாய்விடை ஊர்திநெட் டுயிர்ப்பிற் பட்டுழல் காய்சினக் கலுழனும் கழிய நொந்ததே. 88 | ‘‘திருமால் எமது திருவடிகளை வணங்கி அன்பொடும் அந்நிலையில் நெடும்பொழுது இங்குத் தங்கினன். பாய்ந்து செல்லும் ஊர்தியாகிய விடையின் பெரு மூச்சிற்பட்டு உயிர்ப்பினை வெளிவிடும் பொழுது நீளச் சென்றும் இழுக்கும்பொழுது நெருங்கியும் சுழலுகின்ற மிக்க சினமுடைய கருடனும் பெரிதும் வருந்தியது.” விட்டுவிட் டடக்குதோ றுயிர்ப்பின் வேகத்தால் அட்டநூ றியோசனை அவதி போந்துபின் கட்டெழில் காசியின் நுனிக்கண் சார்தரக் கொட்புறுத் தலைத்தது பறவைக் கோவினை. 89 | இங்ஙனம் பல்கால் உயிர்ப்பினை விட்டு விட்டு அடக்குந்தோறும் அதன் வேகத்திற்பட்டு எண் ணூறியோசனை; எல்லை அளவாகச் செல்லவும் மிக்க அழகிய மூக்கினது நுனிவரை நெருங்கவும் கருடனைச் சுழல்வித்து வருத்தியது. ஒய்யென நெட்டுயிர்ப் புதைந்து மீள்தொறும் மெய்வயிற் சுஃஃறென விரிந்து கூம்பிடுஞ் செய்யபொற் சிறைகளிற் சிதைந்து புன்மயிர் துய்யென வெளியிடைச் சுழன்ற யாங்கணும். 90 | விரையப் பெருமூச்செறிந்து உள்ளிழுக்குந்தொறும் அம்மூச்சுக் காற்றுக் கருடனின் உடலில் தாக்கிச் சுஃறெனும் ஒலியுடன் விரிந்து குவியும் செவ்விய பொன்னிறச் சிறகுகளினின்றும் புல்லிய மயிர்கள் சிதைந்து பஞ்சுத் துய்யைப் போல வானின்கண் எவ்விடத்தும் சுழன்றன. அதிர்ந்தன விண்ணெலாம் அயர்ந்த திக்கயம் உதிர்ந்தன தருத்தழை உக்க மீன்கணம் பிதிர்ந்தன வரைக்குலம் பெயர்ந்த கோள்களும் உதிர்ந்தெழும் சினவிடை உயிர்ப்பின் மொய்ம்பினான் 91 | |