சிலைத்தெழும் சினமுடைய இடபத்தினது பெருமூச்சின் வலிமையினால் விண்ணிடமுற்றும் முழங்கின. எண்திசை யானைகளும் தளர்ந்தன. தேவ தருக்களின் தழைகள் உதிர்ந்தன. நட்சத்திரக் கூட்டங்கள் சிந்தின. அட்ட குல பருவதங்கள் சிதைந்தன. வினைமுற்றுக்கள் முன்னின்று சுவை பயக்கின்றன. எதிருற விலங்கிய வரையும் ஏனவும் மதலையிற் பற்றுவான் மனத்தின் எண்ணுமுன் கதழ்வின்நூ றியோசனை கடத்தி மீட்குமால் மதனுடைக் கலுழனை உயிர்ப்பின் வாயுவே. 92 | உயிர்ப்பி லெழுந்த பெருங்காற்று, எதிராகக் குறுக்கிட்ட மலையையும் பிறவற்றையும் தூண்போல ஆதரவாகப் பற்றுதற்கு மனத்தில் நினைக்கு முன்னமே வன்மையுடைய; கருடனை விரைவின் நூறு யோசனை வரை செலுத்தி மீட்கும். சரிந்தது தருக்குடல் சழங்கல் உற்றதால் இரிந்தது மிடல்இறு மாப்பும் இற்றது முரிந்தன பொலஞ்சிறை முதிர்ந்த தின்னல்நோய் கரிந்தது மாமையும் கருடற் கென்பவே. 93 | கருடனுக்குச் செருக்கு நீங்கியது; உடல் தளர்ந்து போயிற்று; வலிமை ஓட்டெடுத்தது; அகங்காரமும் ஒழிந்தது. பொன்னிறச் சிறகுகள் முரிந்தன; பெருந்துன்பம் விளைந்து முதிர்ந்தது; நன்னிறம் கருகியது. இறுமாப்பே விளைவிற்கு மூலமென்பார் உம்மை கொடுத்துக் கூறினார். பருவரும் புடையினிற் கழியப் பார்க்கும்மீ தொருவருந் தகைத்தெனும் ஊக்கம் இன்மையின் தெருமரும் உணங்குறும் திகைக்கும் தேம்பிடும் வெருவரும் மாயனை விளிக்கும் என்செயும். 94 | வருந்தும்: பக்கங்களில் ஒதுங்க எண்ணும்; இத்துன்பம் நீங்குதற் கரிய தன்மையை யுடைய தென்றெண்ணும்; எழுச்சி இல்லாமையால் மனம் அலமரும்; வாடும்; மயங்கும்; மெலியும்; அஞ்சும்; திருமாலைச் சரணென் றோலமிடும்; வேறென்செயும் பாவம். அறுசீரடி யாசிரிய விருத்தம் ஐயவோ உலகங் காக்கும் அடிகளோ காயாம் பூவின் மெய்யவோ என்னை ஆண்ட விமலவோ திகிரி ஏந்துங் கையவோ எய்ப்பின் வைப்பாம் களைகணோ கலந்தார்க் கென்றும் மெய்யவோ கலவா தார்க்கு வெய்யவோ வேந்த னேயோ. 95 | |