618காஞ்சிப் புராணம்


     இலக்குமி நாயகன் கூறக்கேட்டு ‘இத்துன்ப நிகழ்ச்சிக்குக் காரணம்
யாது? நீ அதனை அறிவாயாயின் கூறுதி; யாம் அதனைப் போக்குவோம்
என்றருளக் கேட்ட மால் ‘நாதனே! கருடன் பெரிதும் செருக்குக்
கொண்டனன். அதனை ஒழிக்கும் கருத்து விருப்பொடும் இங்கு வந்தேன்
இதுவே காரணமாகும்’ என்றனர்.

உள்ளது புகன்றாய் என்ன நந்தியை ஊங்கு நோக்கிக்
கள்ளவிழ் தொடையாய் நம்மை வழிபடுங் கருத்தான் எய்தும்
புள்ளர சினையா வண்ணம் பொருக்கெனப் போந்து சீற்ற
வெள்விடை உயிர்ப்பி னின்றும் விடுவித்துக் கொணர்தி என்றாம் 100

     உண்மைக் காரணத்தைக் கூறினாய் என்றருளித் திருநந்தி தேவரை
அப்பொழுதே பார்த்துத், தேன் சொரிகின்ற மாலையோய்! விரைந்து போய்
நம்மை வழிபாடு செய்யும் கருத்தொடு போதும் கருடன் வருந்தாதபடி
சினமுடைய வெள்ளிய விடையின் நெட்டுயிர்ப் பினின்றும் விடுவித்துக்
கொண்டு வருதி’ என்று கூறினோம்,.

இத்தகும் ஆணை தாங்கி ஆவயின் எய்தி நந்தி
பொய்த்துயில் கொள்ளும் ஏற்றைப் புடைத்தனன் எழுப்ப லோடும்
மெய்த்துயில் உணர்ந்தாள் மான வல்விரைந் தெழுந்து கண்கள்
அத்துறு கலக்கம் காட்டி ஆங்ஙனம் நின்ற காலை.            101

     இத்தன்மையுறும் கட்டளையைச் சிரமேற் கொண்ட நந்தியங்கணுகிப்
பொய்யாகத் துயிலுற்றாற் போல நடிக்கும் விடையை அடித்தெழுப்பிய
அந்நிலையே மெய்யே உறக்கம் நீங்கினாற் போல மிக விரைந்ததெழுந்து
கண்கள் அதற்குத்தகவுறக் கலங்கியன போலத் தோற்றுவித்து எதிர்நின்ற
பொழுதில்,

     அத்துறு-சிவப்புப் பொருந்திய எனினுமாம்.

போற்றுசீர் நந்திப் புத்தேள் புண்ணூறும் உடம்பிற் புள்ளின்
ஏற்றொடு விடையின் ஏற்றை எம்மெதிர் உய்த்தா னாகச்
சீற்றமும் செருக்கும் ஆண்மைத் திட்பமும் வீறும் குன்றி
மாற்றரு மதுகைப் புள்ளே றெம்மடி வணங்கிப் போற்றி.       102

     போற்றப் பெறும் சிறப்பினையுடைய நந்தி தேவர் புண்கள் பொருந்திய
உடம்பினையுடைய பறவை அரசினையும் விடை அரசினையும் எம்முடைய
திருமுன் கொண்டு வந்தாராகக் கோபமும், உள்ளத்துட் செருக்கும்,
திண்ணிய ஆளுந்தன்மையும், பிறிதொன்றற்கு இல்லாத இறுமாப்பும்
சுருங்கிப் போக்கரிய வலிமையையுடைய அக் கருடன் எம்முடைய அடிகளை
வணங்கித் துதி செய்து.

ஒடுங்கிஉள் ளுடைந்து தண்டா துயிர்ப்பெறிந் திரங்கி மேனி
நடுங்கிடக் கண்ணீர் வார முரிசிறை மருங்கு நால
நெடுங்கை தன் சிரமேற் கூப்பி மால்புடை நிற்ப நோக்கிக்
கொடுங்கொலைப் பகழிக் கண்ணாய் விடைக்கிது கூறலுற்றாம்.   103