620காஞ்சிப் புராணம்


ஆட்சிசால் அரசு செய்து கடைமுறை ஆனேற் றண்ணல்
மீட்சியின் அருள்பெற் றிங்கு மேவிவீற் றிருந்த தன்றே.   107

     தரிசனம் தந்தருளும் நம்மிடத்தே வரங்கள் பலவற்றையும் விரும்பிப்
பெற்று மாண்புடைய உலகமுழுதினையும் விதிவழி நெடுங்காலம் ஆட்சி
அமைந்த அரசு புரிந் திறுதியில் இடபநாயகம் மீளும் அருளைப் பெற்று
இங்கு வந்திருந்தது.

     அம்மையார் காஞ்சிக் கெழுந்தருளல்

ஆதலின் நீயும் அங்கண் அகிலமும் உய்வான் எம்மை
மேதகு கழுவாய் நீரின் விதியுளிப் பூசை செய்யப்
போதராய் என்று நல்கப் புரிகுழ லணங்கு தாழ்ந்து
நாதனார் இசைவு பெற்று நயந்தெழுந் தருள லுற்றாள்.     108

     ஆகலின், நீயும் அனைத்துயிர்களும் அறிந் துய்யும் பொருட்டு
அவ்விடத்து மேன்மை பொருந்திய பிராயச்சித்தத் தன்மையின் எம்மை
விதிவழிப் பூசனை புரியச் செய்வாய்’ என்று விடையருளச் சுரிகுழலையுடைய
அம்மையார் தாழ்ந் தெழுந்து தலைவர் தம் இசைவினைப் பெற்று விரும்பி
எழுந்தருள்வாராயினர்.

நம்பனார் தம்மை இன்ப நகையிடைத் தணக்கும் நோயும்
கம்பரைப் பூசை செய்யுங் காதலும் இருபால் ஈர்ப்ப
எம்பிரான் அருளாய் என்று தாழ்ந்துதாழ்ந் தெழுந்து நின்று
கொம்பரின் ஒல்கிப் பல்காற் புறவிடை கொண்டு போற்றி.   109

     நாயகனாரை இன்பத்திற்குக் காரணமாகிய பொழுது போக்கிடைப்
பிரிதலான் ஆகும் வருத்தமும், திருவேகம்ப நாதரைப் பூசனைபுரிய எழும்
பெருவிருப்பும் ஆகிய இரண்டு நிகழ்ச்சியும் அகத்தும் புறத்து மாக வலிப்ப
‘‘எமது பிரானே! அருளாய்” என்று பல்காற் தாழ்ந்து தாழ்ந்து எழுந்
தெழுந்து பூங்கொம்பு போலத்துவளுற்று நின்று புறஞ்செல்லப் பன்முறை
விடைபெற்றுக்கொண்டு துதிசெய்து,

     பிரிவாற்றாமையால் பன்முறை விடைகொண்டனர்

மின்கொண்டல் மிடற்றார் காட்சி விழிக்கெதிர் மறையுங் காறும்
பின்கொண்டு நடந்து சென்று பெருமுதல் வாய்தல் நீங்கி
முன்கொண்டு நடவா நின்றாள் முக்குறும் படக்கி ஐவர்
வன்கொண்டி கடந்த மேலோர் காண்டக வயங்கும் அம்மை.    110

     முக்குற்றங்களை நீக்கி வலியுடைய ஐம்புலன்களாகிய ஆறலைப்
போரை வென்ற மேன்மக்கள் காணுமாறு புலப்படும் அம்மையார் மின்னுடைய
மேகம் போலும் திருக்கழுத்தினையுடைய பெருமானாரது திருக்காட்சி காணும்
அளவு கண்களுக்கு மறையுமளவும் இறைவனையே கண்டு கொண்டு முகம்
காட்டிப் பின்னாக நடந்து பெரிய தலைவாயிலைக் கடந்தபின் முன்நோக்கி
நடந்தனர். கொண்டி-அறிவைக் கொள்ளையிடல். ஐவர் என்றது குறிப்பின்
இகழ்தல், அவற்றின் கொடுமையை விளக்கியது.