அளவிலாக் கருணைப் பெருங்கட லென்ன அடர்ந்தவல் லிருளுடைந் தோடுங், கிளைவழி துருவித் துரந்துகொண் டெய்தும் கேழ்கிளர் ஒளிக்குழா மென்ன, வளமலி தென்பால் செய்தவந் திரண்டு வருவதே என்னவும் உலவாக், களிவரு சிறப்பின் வான் நெறிப் படர்ந்தாள் கணவனார் அருள்வழி நின்றாள். வற்றாத களிப்பெழும் உயர்வொடும் கணவனார் திருவுள்ளக் கருத்தின்வழி யொழுகும் அம்மையார், செறிந்த ஆணவமாகிய கொடிய இருள் புறங்கொடுத்தோடும் சிறு நெறிகளைத் தேடி முடுகிக் கொண்டு பின் செல்லும் நிறம் விளங்கும் ஓவியத் தொகுதியை ஒப்பவும், வளமிகுந்த தென் திசை செய்த தவம் திரண்டு வருவதே போலவும் வான்வழிச் செலவு கொண்டனள். மேற்படி வேறு எண்ணி லார் மிடைந்து விண்ப ரப்ப டைத்தி யங்கலால் அண்ணல் ஞாயி றாதி வாள் மறைந்தி ருள்அ டர்ந்திடக் கண்ணு றுத்த யிர்க்கு முன்க டுப்பின் எய்து வோரொளி வண்ணம் அவ்வி ருள்கி ழிப்ப நோக்கி ஞால மாந்தர்தாம். 122 | அளவிலார் நெருங்கி விண்ணிட மெல்லாம் செறிந்து சேர்தலாலே தலைமை அமைந்த சூரியன் முதலியவற்றின் ஒளி மறைந்திருள் தொடர்ந்திடலான் கண்ணைப் பொத்தி, இது யாதென ஐயுறு முன்னமே விரைவாக வருவோருடைய ஒளிநிறம் அவ்விருளைப் போழ உலகோர் நோக்கி, மாலு றுக்கு நீர்மை யோடு தோன்றி இ்ங்கு மாய்ந்தது நீல மின்னல் போலும் அன்பர் என்னு முன்னார் நீளிடைச் சால மிக்க ஓதை கேட்டு மின்ப யந்த தண்முகில் காலும் ஓதை யாங்கொல் என்று காதின் ஓர்த்து நிற்பரே. 123 | மயக்ககுறுத்தும் இயல்போடு புலப்பட்டு இங்கு மறைந்தது மேகத்தின் நீலமின்னொளிபோலும் என்று கூறுவர் ; அங்ஙனம் கூறுதற்கு முன்பே நெடுந்தொலைவில் மிகப் பேரோசையைக் கேட்டு இம்மின்னலைத் தோற்றுவித்த நீர் கொண்ட மேகம் இடித் துமிழ்கின்ற பேரொலி கொல்லோ என்று செவி சாய்த்து ஆராய்ந்து நிற்பர். ஒளி முன்னும், ஒலி பின்னும் வருதலின் இம்முறையிற் கூறினார். செல்லு வோர்நெ ருக்கி டைத்தெ றித்தி டும்பொ லஞ்சுடர்ப் பல்ல ணிக்க லன்கள் உக்க பன்ம ணித்தி ரள்களை ஒல்லை நோக்கி ஆர்த்த மேகம் ஒன்ப திற்று மாமணிக் கல்லின் மாரி பெய்வ தென்று காண்தொ றும்வி யப்பரே. 124 | செல்லுவோர் மிடைதலினால் எறிக்கும் பொன்னொளியினை யுடைய பல்வகை அணிகளினின்றும் உதிர்ந்த பல மணிக் குவியல்களை விரைவின் நோக்கி இடித்த மேகம் ஒன்பது வகை ஒளி மணிகளைக் கல்மழை பெய்யா நின்ற தென்று காணுந்தோறும் இறும்பூது கொள்வர். |