| 		| ஐய னேஅருள் புரிகஆ ரழற்சிகை ஏந்தும் கைய னேஅருள் புரிகபல் கதிரொளி பரப்பும்
 மெய்ய னேஅருள் புரிகமெய்க் கூத்தெனைக் காட்டும்
 செய்ய னேஅருள் புரிகெனச் செப்பினன் பலகால்     163
 |       ‘தலைவனே அருள்புரிக! ஏந்துதற்கரிய நெருப்புக் கொழுந்தினை     ஏந்தும் திருக்கையனே அருள்புரிக! பல சூரியர் ஒளியை விரிக்கும்
 திருமேனியனே அருள்புரிக! உண்மைத் திருக்கூத்தினை அடியேனுக்குக்
 காட்டும் செவ்வியனே அருள்புரிக’ எனப் பலமுறை விண்ணப்பம் செய்தனர்.
 		| அன்ன பெற்றிகண் டியாவரும் அதிசயம் எய்தி என்னை என்னைமற் றிதுவெனக் குதுகுதுப் போடும்
 பொன்ன டித்தலம் போற்றினர் வினாதலும் நெடியோன்
 மன்னு றும்பெரு மகிழ்ச்சியான் அவர்க்கிது வழங்கும்.   164
 |       அந்நிலைமையை யாவரும் நோக்கி வியப்பெய்தி ‘ஈதென்னே! என்னே!’     என் றதிசயத்தொடும் பொன்போலும் திருவடிகளைப் போற்றினராய்
 வினாவுதலும் திருமால் நிலைபெறும் பெரு மகிழ்ச்சியினால் அவர்தமக்
 கிதனைக் கூறுவர்.
 		| செறியும் நான்மறைச் சிரமிசைப் பரம்பொருள் இந்நாள் அறிஞர் காண்கிலா அற்புதத் திருநடம் எனக்குப்
 பிறிவ ரும்பெருங் கருணையாற் காட்டிடப் பெற்றேன்
 மறியும் இவ்வுடல் வருபயன் கிடைத்ததென் றனக்கே.    165
 |       பொருள் செறிந்த நான்கு வேதங்களின் உச்சியில் வீற்றிருக்கும்    முதற்பொருள் அறிஞர்களும் காணக்கூடாததாய் இருக்கின்ற ஞானத்
 திருநடனத்தை இன்று நீங்காத பெருங்கருணையால் எனக்குக் காட்டிடத்
 தரிசிக்கும்போது பெற்றேன். அழிந்து வீழும் இவ்வுடம்பு பெற்றதன் ஊதியம்
 எனக்கே வாய்த்தது.
 		| அவ்வ ருட்டிருக் கூத்தினைக் கண்டஆர் வத்தால் இவ்வு றுப்பெலாம் விதிர்விதி்ர்ப் பெய்தின கண்டீர்
 செவ்வன் ஓர்மின்என் றியம்புசொற் செவித்துளை நிறைப்பக்
 கொவ்வை வாய்த்திரு முதலியோர் ஆதரங் கொண்டார்.  	166
 |       ‘உயிர்களுக்கு அருள்புரிதலையுடைய திருக்கூத்தினைத் தரிசித்த    பெருமகிழ்ச்சியினால் அங்கங்கள் யாவும் துடிதுடித்தன காணீர், நன்கு
 உணர்வீர் ‘ஆமின்’ என்று கூறிய சொற்களைக் காதாரக் கேட்டு கொவ்வைக்
 கனியை ஒக்கும் அதரங்களையுடைய இலக்குமி முதலானோர் விதுப்புற்றனர்.
 		| கேட்ட அப்பொழு தேஎதிர் கண்டெனக் கிளர்ந்து காட்டும் வேணவா மீமிசை எழக்கழல் வணங்கி
 |  |