அம்மையாரைப்பாகம் கொண்டவர் திருவருளாற் றழைக்கும் இன்பத் தமிழ் மொழியாகிய ஒப்பற்றதனைத் தரைக்கண் விளங்குமாறு பரப்புவாய். பாணித்தல் அமையும் இன்னே படர்கெனும் பவளச் செவ்வாய் வாணிக்கு மணாளன் றன்னை விடைகொண்டு மகிழ்ச்சி கூர ஆணிப்பொன் மாடக் கோயில் அகிலநா யகரை அன்பாற் பேணித்தாழ்ந் தெழுந்து காசிப் பெரும்பதி தணந்து போந்தான். | ‘காலம் தாழ்த்தது போதும் இப்பொழுதே செல்க’ என்று கூறும் பவளம் போலும் சிவந்த வாயினையுடைய சரசுவதிக்கு நாயகனிடத்து விடைபெற்றுக் கொண்டு உவகை மீக்கூர உயர்ந்த பொன்னா னியன்ற கோயிலில் விசுவநாதரை அன்பொடும் போற்றி வணங்கி எழுந்து காசிமா நகரினின்றும் நீங்கிச் சென்றனர். அகத்தியர் விந்தமலையை அடக்குதல் கச்சிமா நகரங் காணும் ஆதரங் கைமிக் கீர்ப்ப நச்சணி மிடற்றார் பாத நகைமலர் மனத்துட் கொண்டு பொச்சமில் மனையா ளோடும் வான்நெறிப் போது கின்ற விச்சைதேர் முனிவன் றன்னைக் கண்டது விந்த நாகம். 219 | காஞ்சி மாநகரைக் காணும் பெருவிருப்புக் கைகடந்து முன்னே இழுப்ப விடத்தை அணிந்த கண்டர் திருவடி ஒளி மலர்களைக் திருவுள்ளத்துட் கொண்டு படிற்றொழுக்கம் அகன்ற உலோபா முத்திரை என்னும் மனைவியொடும் வான்வழிப் போதுகின்ற நூற் றுறை போய அகத்திய முனிவரை விந்தமலை கண்ணுற்றது. ஊற்றெழும் பரவைத் தெண்ணீர் உழுந்தள வாக்கி உண்ணும் ஆற்றலின் நெடிய னாகி அளவினிற் குறிய னாய நீற்றணி முனிவர் கோனைக் காண்டலும் நெஞ்சம் மாழ்கிப் பாற்றரும் பயம்மக் கொண்டு பதைபதைத் தொடுங்கிச் சோர்ந்து. 220 | கடல் நீரை உழுந்தின் அளவாக்கிப் பருகும் ஆற்றலாற் பெரியராகி வடிவிற் குறியராய திருநீற்றுக் கோலம் பூண்ட முனிவரரசைக் காணுதலும் நெஞ்சம் வருந்தி போக்குதற்கரிய பயத்தை மேற்கொண்டு நடுநடுங்கி ஒடுங்கித் தளர்ந்து, குறுகிமுன் குறுகித் தாழ்ந்து கோதறு விதியி னாற்றால் நிறுவிய அருக்கி யாதி அருச்சனை நிரப்பல் நோக்கி உறுவனும் மகிழ்ந்து பத்தி விளைவினை உயர்த்துக் கூற மறுவலுந் தொழுது போற்றி மணிவரை இதனை வேண்டும் 221 | குறுகியாகிய முனிவரரைக் குறுகி வணங்கிக் குற்றமற்ற விதிமுறையால் அருக்கியம் முதலிய வழிபாட்டினைப் புரிதல் நோக்கி முனிவரரும் மகிழ்ந்து மெய்யன்பின் முதிர்ச்சியை எடுத்துப் பாராட்ட |