விடைக் கொடியை எடுத்தருளி மாறுபட்டவருடைய முப்புரங்களைச் சிரித்தெரிந்த அரசே எனக்கு வழிவழித் தெய்வம் ஆகலின், யானே பெருஞ் செல்வன்; யானே பெருஞ் செலவன்; யானே பெருஞ் செல்வன் எவ்வுலகினும் என்னை ஒப்பவர் ஒருவரும் இலர். சிறந்துன்னைத் தெய்வமெனக் கொள்ளாத சீத்தை பிறந்த குலம்பிறவா நின் றகுலம் பீளின் உறந்த குலத்தும் உமைஒருபால் மேயாய் மறந்தும் பிறவாத வாழ்வெனக்கு வேண்டுமால் 238 | எத்தேவரினும் சிறந்த உன்னைத் தெய்வமெனக் கொண்டு போற்றாத கீழ்மகன் பிறந்த குலத்தினும், பிறவாநின்ற குலத்தினும், கருப்பத்தில் தங்கிய குலத்தினும் உமையொருபாகனே! மறந்தும் பிறவாத பெருவாழ்வு எனக்கு வேண்டுவதாகுக. ஏழைக் குறும்பின் இமையோர் தமக்கிரங்கிப் பீழைக் கொடுவிடத்தை உண்டளித்த பேராளா ஆழிப் பெருங்கருணை ஆரமுதே வெற்பீன்ற மாழைப்பூங் கண்ணி மணாளா அடிபோற்றி. 239 | அறியாமையாற் கொடுமையைச் செய்யும் தேவர் தமக்குக் கருணை காட்டிப் பெருந் துன்பத்தைச் செய்யும் கொடிய விடத்தை உண்டு காத்த பெருங்கருணையுடைய தலைவனே! கடல்போலும் பெருங்கருணையே! அரிய அமுதமே! மாவடுவை ஒக்கும் பூப்போலும் கண்களை யுடைய காமாட்சிக்கு நாயகனே! திருவடிகள் காக்க. அகத்தியர் வேண்டுகோள் மேற்படி வேறு என்றென்று பன்முறையுந் துதித்திறைஞ்சித் தாழ்ந்தெழுந்து நின்றுகரஞ் சிரமுகிழ்ப்ப நிறைந்தபெரு மகிழ்ச்சியுடன் குன்றனைய பெருந்தவத்தோன் இதுவொன்று கூற்றுதைத்த மின்றிகழுஞ் சேவடிக்கீழ் விண்ணப்பஞ் செய்கின்றான். 240 | என்றென்று வாயாரப் பலமுறையும் துதித்துக் கைகுவித்து வீழ்ந்து வணங்கி நின்று கரங்கள் சென்னிமேற் குவிய நிறைந்த பேருவகையொடும் மல்லல் மலையனைய மாதவத்தோராகிய அகத்தியர் மார்க்கண்டேயர்க்காக இயமனை உதைத்துப் பயங்கெடுத்த திருவடிக்கீழ் வேண்டுகோள் ஒன்றை விடுப்பார். அடியனேன் வடகாசி நீத்தகன்று நினக்கினிய கடிமதில்சூழ் கொடிமாடக் காஞ்சியினைத் தலைப்பட்டுப் பொடியணிந்த திருமேனிப் புண்ணியமே இமயவரைப் பிடிமணந்த மதகளிறே பெரும்பேறு பெற்றுய்ந்தேன். 241 | |