இரு மொழியையும் அறிவான் நிரம்பியோரே கைக்கொண்டொழுகினர் எனின் இங்ஙனம் ஒப்பச் சிறந்த இருமொழியும் ஒப்பென்னும் இதனுக்கு ஐயம் உண்டு கொல்லோ! அகத்தியர் பொதிகை யடைந்த வரலாறு கலி விருத்தம் இத்தகு தமிழ்ஓதி ஆங்கினி துறைநாளில் அத்தலை அரனார்தாம் ஆயிழை உமையாளைப் புத்தணி திகழ்மன்றல் புரிநலம் உளதாக எத்தலை உறைவோரும் ஈண்டினர் இமயத்தில். 250 | இவ் வியல்பினையுடைய தமிழை ஓதியும் ஓதுவித்தும் அங்கிருக்கும் காலத்தில் இமயமலையில் சிவபெருமானார் ஆராய்ந்த அணிகளையுடைய உமையம்மையைப் புத்தழகு விளங்கும் திருமணம் செய்து கொள்ளும் நன்மை உண்டாக யாண்டுள்ளோரும் அவ்விமயத்தே வந்து குழுமினர். முனிவொடு வரைதாழ்த்த முனிவனும் அதுநோக்கிப் பனிவரை தனையுற்றான் பலபல உலகத்தின் இனிதுறை உயிரெல்லாம் தொகுதலின் இருஞாலத் தனிமகள் ஒருபக்கம் சாய்ந்தனள் பொறை ஆற்றாள். 251 | வெகுண்டு விந்தமலையைத் தாழச் செய்த அகத்திய முனிவரும் அதனை மனங்கொண்டு இமயத்தை எய்தினர். பலப்பல உலகங்களின் விரும்பியுறையும் பலரும் ஒருங்கு கூடினமையால் நிலமகள் சுமைபொறுக்க லாற்றாளாய் ஒரு புடை சாய்ந்தனள். தென்புவி மிசைஓங்கித் திகழ்வட புவிதாழப் பொன்பயில் உலகத்துப் புங்கவர் அதுகாணூஉத் துன்பொடு பயமெய்தித் துணையடி தொழுதேத்தி என்பணி வரைமார்பற் கின்னது புகல்கிற்பார். 252 | தென்பூமி மிக்குயர்ந்து, விளங்குகின்ற வடதிசை மிக்குத் தாழ்தலின் பொன்னுலகிற் பயிலும் தேவர் அதனைக் கண்டு துன்பமும் பயமும் எய்தி எலும்பை மாலையாக அணிந்துள்ள மலையை ஒக்கும் மார்பினையுடைய பெருமானார் இணையடிகளைத் தொழுது துதித்து விண்ணப்பஞ் செய்வார். தாழுறு புவிதன்னைச் சமன்நிலை பெறவைத்துக் காழுறு தமியேமைக் காப்பது கடன்எந்தாய் ஆழ்கடல் விடமுண்டோய் இல்லெனில் அடியேங்கள் வாழலம் இதுபோதே அவல்விழு வதுதிண்ணம். 253 | தாழ்தலும் உயர்தலுமாகிய புவியைச் சமனாக நிலைபெறுவித்து மருளும் மனமுடைய துணையிலிகளைக் காத்தல் உனக்குக் கடப்பாடு |