658காஞ்சிப் புராணம்


ஆகும் எமக்குத் தந்தையே! ஆழமுடைய கடலிற்றோன்றிய விடத்தைப்
பருகிக் காத்தோனே! காத்தல் இல்லையெனில் அடியேங்கள் வாழ்கிலேமாய்
அழிவேம். இப்பொழுதே பள்ளம் வீழ்வது நிச்சயம் ஆகும்.

வெருவரு செயலோ ராய் விண்ணவர் இதுகூறத்
திருமுடி அசைவோருஞ் சினவிடை யவர்சொல்வார்
தருமலர்த் தொடையீர்காள் சனமிக நிறைவுற்று
மருவிய பாரத்தால் தாழ்ந்தது வளர் ஞாலம்.       254

     அஞ்சுகின்ற செயலினராய்த் தேவர் இவ்வாறு கூறத் திருமுடியை
அசைத்துக் கொண்டே விடையூர் விமலர் அருளுவார்: ‘கற்பக முதலிய
மரங்களின் மலர் மாலையை உடையீர்! சனப் பெருக்கம் நிறைதல்
மேலிட்டுக் கூடிய பாரத்தினால் தங்கும் உலகம் தாழ்ந்தது.

ஆதலி னியாமாதல் எம்மொடு நிகராம்ஓர்
மாதவ முனியாதல் தென் றிசை வயின் இன்னே
போதரின் உலையாமே புவிநிலை பெறும்என்னக்
காதர முறுவிண்ணோர் கேட்டனர் கவலுற்றார்.     255

     ‘ஆகலின் யாமாயினும் பெருந்தவ வலியால் எம்மையே நிகர்க்கும் ஓர்
முனிவராயினும் தென்றிசைக்கு இப்பொழுதே சென்றால் பூமி அழியாமல்
சமமாக நிலைபெறும்’ என்றருளத், துன்பமிகும் தேவர் கேட்டு மேலும்
வருந்தினர். காரணம் அடுத்த பாடலான் விளங்கும்.

மணவினை நிகழ்காலை மதிமுடி யுடையார்அங்
கணைவது தகுமோவே றவறொடு நிகர்வார்யார்
இணையிலி முழுதிற்கும் இறையவன் எவராலும்
உணர்வரு முதல்என்றே ஓலிடும் மறையெல்லாம்.    256

     திருமணம் நிகழ இருக்கையில் பிறையை முடித்த பெருமானார்
தென் திசையை அடைய வேண்டுவது தக்கதோ? அப்பிரானொடும் ஒப்பவர்
வேறு யாவருளர்? தனக்குவமையில்லாதான் என்றும், சரம் அசரங்களாகிய
முழுதிற்கும் இறையவன் என்றும், யாவராலும் உணர அரிய முதல்வன்
என்றும் மறைகள் யாவும் மிக முழங்கும்.

என்றிவை பலஎண்ணி இணையடி தொழுதேத்தி
அன்றினர் புரமூன்றும் நீற்றிய அடிகேள்இம்
மன்றலின் நீசேறல் எவ்வணம் உனைநேரா
கின்றவர் உளரென்று கேட்டிலம் எங்கெங்கும்.     257

     என்ற இவைபோல்வன பலவும் எண்ணித் திருவடிகளிற் பணிந்து
போற்றி, ‘‘பகைவருடைய முப்புரங்களையும் நீறு படுத்திய அடிகேளே! இத்
திருமணத்தில் நீவிர் அங்குச் செல்லுதல் எங்ஙனம் அமையும். உம்மை
ஒப்பவர் ஒருவர் உளர் என்று மறைகளில் யாண்டும் கூறக்கேட்டிலேம்.