என்னலும் அனல்அங்கை ஏற்றவர் இமையீர்நீர் சொன்னது மெய்யேஇத் தொல்லுல கினில்எம்மை அன்னவர் இலைகண்டீர் குறுமுனி அலதென்னாப் பன்னிய மொழிகேளாப் பண்ணவர் களிகூர்ந்து. 258 | என்று கூறிய அளவிலே அகங்கையில் நெருப்பை ஏற்ற பிரானார், ‘‘இமையா நாட்டம் உடையீர்! நீவிர் கூறியது உண்மையே. இம்மூதுலகில் எம்மை ஒத்தவர் அகத்திய முனிவரன்றிப் பிறர் ஒருவரும் இலர் என்றறிதிர் என்றருளிய பெருமையைக் கேட்டுத் தேவர் மகிழ்ச்சி மிகுந்து, மங்கல வினைசான்ற வதுவைசெய் அமையத்தின் எங்களை உடையாய்நீ ஏகுவ தமையாதே அங்கினி அணைகிற்பான் தமிழ்தெரி அறவோற்குச் சங்கர விடைநல்கத் தகுமென உரைசெய்தார். 259 | ‘‘எங்களை அடிமையாக உடையோனே! மங்கலச் சடங்குகள் அமைந்த திருமணங் கொள்ளுங் காலத்தில் நீ செல்லுதல் சாலாதே. சங்கரனே! இப்பொழுது அங்குப் போம்படி தமிழை ஆராய்ந்த அறவோராகிய அகத்தியர்க்கு விடை கொடுத்தல் பொருந்து’’ மெனக் கூறினர். கடல்விடம் அமுதாக்குங் கறைமிட றுடையாருங் குடமுனி தனைஅங்கண் கூயினர் எதிர்நோக்கிப் படரொளி இளமூரல் பனிமுக மலர்காட்டித் தொடர்புடை விழிகாட்டுங் கருணையின் இதுசொல்வார். 260 | விடத்தை அமுது செய்த திருநீலகண்டரும் கும்ப முனிவரரை அங்குக் கூவி அழைத்து எதிருற நோக்கிப் படர்கின்ற ஒளியுடைய புன்முறுவலையும், குளிர்ந்த முக மலர்ச்சியையும் அருளி, அவற்றொடு தொடர்புடைய திருவிழிகளின் ஒழுகும் கருணையொடும் கீழ்வருமாறு கூறுவார். புத்தெழில் பெறுவிந்தம் புரிதரும் இடர்மாற்றி முத்தமிழ் முனிவாமுன் முச்சக முழுதுய்ய வைத்தனை இதுபோதுஞ் சந்தன வரைநண்ணி இத்தரை சமமாகப் புரிமதி கடிதென்றார். 261 | ‘‘முத்தமிழையும் முற்ற உணர்ந்த முனிவனே! முற் காலத்தில் மூவுலகமும் முற்றவும் பிழைக்குமாறு அருள்செய்து விந்த மலையின் செருக்கை அடக்கிக் காத்தனை. இப்பொழுதும் பொதிகை மலையை நண்ணி இருந்து இவ்வுலகைச் சமநிலையாம்படி விரைந்துசெய்’’ என்று அருளினர். நண்ணிய இப்பொழுதும் உதவ முன்னதை நினைவுறுத்தினர். இருந்த துணையானே சமமாம் என அருளினர். |