660காஞ்சிப் புராணம்


இருள்பொதி மணிகண்டர் அடிதொழு திருமுந்நீர்
பருகிய முனிவேந்தன் பையுளின் உரைசெய்வான்
அருள்பெறும் அடியார்கட் கவரினும் இனியானே
கருணையின் நிறைவேயான் கழிவது முறையேயோ.     262

     பெரிய கடல் நீரைப் பருகிய முனிவரரசு வருத்தத்தொடும் இருள்
பொதிந்த திருநீலகண்டர் திருவடிகளைத் தொழுது கூறுவர்; அருளைப்
பெறும் அடியவர்கட் கவர் தம்மினும் இனியானே! கருணையின் சால்பே!
யான் அகலுதல் தகவேயோ.

     ‘‘என்னினும் இனியான் ஒருவன்’’ (திருநாவுக்கரசர்.)

மருவினர் பிரியொண்ணாய் மற்றிவ ரெல்லாம்நின்
திருமண நிறைகோலங் காண்டகு திறல்பெற்றார்
பெருமண நடுவேநீ பிரிகென எனை நீப்ப
இருளுறு கொடியேன்இங் கெப்பிழை செய்தேனோ.   263

     மருவினர் பிரியொண்ணாய்! இவர் யாவரும் நினது நிறைந்த
திருமணக் கோலத்தைக் காணத்தகும் பேற்றினைப் பெற்றனர். பெரிய
மண நிகழ்ச்சியில் நீ பிரிக என என்னை நீக்குமாறு அறியாமை மிகு
தீவினையோன் இவ்விடத் தெப்பிழையைப் புரிந்தேனோ!

     பிரியாமையை வேண்டுவார் ‘மருவினர் பிரியொண்ணாய்’ என்றனர்.

துணைவிய ரொடுவானத் தொல்லுல குடையாரும்
பணமணி மணிநாகர் பாரிடர் முனிவோரும்
மணவணி தொழுதுய்வான் இன்னமும் வருகின்றார்
அணைவுறு தமியேனைத் தள்ளுவ தழகேயோ.       264

     விண்ணவரும், படத்திற்பொருந்திய மாணிக்கம் உடைய நாகரும்,
பூதகணங்களும், முனிவரரும் தத்தம் வாழ்க்கைத் துணைவியரொடும்
மணக்கோலத்தைத் தரிசித் துய்யும் பொருட்டு மேலும் வருகின்றனர்.
நெருங்கிய வேறோர் பற்றிலேனைத் தள்ளுதல் நன்றேயோ!

விரைசெலல் முனிவோர்கள் விரைகெழு சுனைதோய்வார்
அரசிலை குசைமற்றும் அன்புடன் எதிர்உய்ப்பார்
கரகமும் இழைசூழ்வார் அவரொடு களியாமே
தெருமர அடியேனைத் தள்ளுதல் சீரேயோ.         265

     விரைந்து செல்லுதலையுடைய ஐம்புலன்களை வென்ற முனிவோர்கள்
மணங் கமழும் சுனைகளில் மூழ்குவார். அரசிலையையும், தருப்பையையும்
பிறவற்றையும் அன்பொடும் கொண்டு வருவார், கலசங்களுக்கு நூல்
சுற்றுவார், அவரொடும் கூடி மகிழ்ந்து தொண்டு செய்யாமே மனம் வருந்த
அடியேனைத் தள்ளுதல் சிறப்பேயோ!