தழுவக் குழைந்த படலம் 661


பாடுவர் சிலர் அன்பர் பரவுவர் சிலர்அன்பர்
ஆடுவர் சிலர்அன்பர் அழுகுவர் சிலர்அன்பர்
ஓடுவர் சிலர்அன்பர் உவரொடு மகிழாமே
வாடுற அடியேனைத் தள்ளுதல் மரபேயோ       266

     பாடுவார் சிலரும், துதி செய்வார் சிலரும், ஆடுவார் சிலரும்,
அழுவார் சிலரும், ஓடுவார் சிலரும் ஆம் மெய்யன்பரொடும் கூடி
மகிழாமே வாட்டமுறும்படி அடியேனைத் தள்ளுதல் வழக்கேயோ!

ஒளிமணி மழைதூர்ப்பார் ஒண்மலர் மழைதூர்ப்பார்
புளகமும் உடல்போர்ப்பார் புகழ்பல திசைபோர்ப்பார்
அளவறு மகிழ்கூர்ப்பார் அவரொடு கலவாமே
தளர்வுற அடியேனைத் தள்ளுவ தருளேயோ.     267

     ஒளியுடைய நவமணிகளையும், மழையை ஒப்பச் சொரிவார்;
விளக்கமுடைய மலர்களை மழைபோல வீசுவார்; மெய்யெலாம் மயிர்
சிலிர்ப்பார்; புகழ்ச்சியை எண்டிசையினும் விரிப்பார்; எல்லையில்லாத
மகிழ்ச்சிமீக்கூர்வார்; இங்ஙனம் மெய்யன்பராம் அவரொடும் கூடிச்
செயற்படாமே வாட அடியேனை விலக்குதல் அருளின் வண்ணமோ!

கண்டனம் மண இன்பங் காழுறு வினையெல்லாம்
விண்டனம் உலவாத மேதகு சிவபோகம்
கொண்டனம் என ஆர்ப்பார் அவரொடு குலவாமே
தொண்டற அடியேனைத் தள்ளுதல் சூழேயோ.    268

     ‘கண்டனுபவித்தோம் மணவினை இன்பத்தை; திண்மைமிக்க தீவினை
முற்றவும் விடுத்தனம்; கெடாத மேன்மையுடைய சிவபோகத்தைக் கைக்
கொண்டோம்; என் றாரவாரிப்பார் அவர்தம்முடன் கூடிய இன்புறாமே
பணிகெடும்படி அடியேனைப் போக்குதல் திருவுள்ளக் குறிப்பேயோ!

குழல்அவிழ் வதும்ஓராார் குழைவிழு வதும் ஓரார்
இழைசரி வதும்ஓரார் எதிர்எதிர் மடமாதர்
மொழியும்மங் கலஓதை இருசெவி முகவாமே
கழிவுற அடியேனைத் தள்ளுதல் கடனேயோ.     269

     கூந்தல் நிலைகுலைதலையும் மனங்கொள்ளார்; காதணி கழன்று
வீழ்தலையும் காணார்; அணிகள் பிறழ்வனவற்றையும் சிந்தியார்; எதிர்
எதிராக மடமகளிர் கூறும் மங்கலப் பாட்டிசைகளை இருகாதுகளானும்
முகந்து பருகாமல் கழிந்து போக அடியேனைத் தள்ளுதல் கடப்பாடோ!

முனிவரர் கணநாதர் அயன்அரி முதலானோர்
பனிஅறு கணிகாலைப் பேரிசை படமுன்பின்
எனஎழு நிறைபூசல் கண்டினி துவவாதே
மனமடி வுறஎன்னைத் தள்ளுதல் மாண்பேயோ.    270