முனிவரரும், கணநாதரும், பிரமன்திருமால் முதலானோரும் குளிர்ச்சியுடைய அறுகினை மணமக்கட்கு அணியும் பொழுது பேரொலி எழுமாறு ‘யாம்முன்னே நீவிர்பின்னே’ என எழும் நிறைந்த மாறுபடும் உரையைக்கேட்டினிது மகிழாமே மனந் தளருமாறு அடியேனை அகற்றுதல் பண்பேயோ! மணமக்கட்கு அறுகணிதல்; ‘அறுகெடுப்பார் அயனும் அரியும் அன்றி மற்றிந்திரனோடமரர் நறுமுறு தேவர்கணங்களெல்லாம் நம்மிற் பின்பல்ல தெடுக்க வொட்டோம், செறிவுடை மும்மதி லெய்தவில்லி திருவேகம்பன் செம்பொற் கோயில்பாடி, முறுவற் செவ்வாயினீர் முக்கணப்பற் காடப்பொற் சுண்ணம் இடித்தும்நாமே, (திருவாசகம்), (நறுமுறு-மொறுமொறுக்கின்ற - முணுமுணுக்கின்ற) எனவும், ‘ஒருபதி னாயிரம் திருநெடு நாமமும், உரிமையிற் பாடித் திருமணப் பந்தருள், அமரர் முன்புகுந் தறுகு சாத்திநின், தமர்பெயர் எழுதிய வரிநெடும் புத்தகத், தென்னையும் எழுத வேண்டுவல்’ (கோயில் நான்மணிமாலை) எனவும் வருவனகாண்க. மண்டில மணிவேதி குண்டமும் மலிவித்திங் கெண்டிசை புகைவிம்ம எரியிடை இழுதூற்றித் தண்டிரள் பொரி அட்டுந் தகவது காணாமே விண்டிட அடியேனைத் தள்ளுதல் விழைவேயோ. 271 | குண்ட மண்டில வேதிகைகளை வகுத்து எட்டுத்திசைகளிலும் புகை பொங்கிப் பரவ வேள்வித் தீயில் நெய்யைப் பொழிந்து நெற்பொரியைச் சொரியும் இனிய காட்சியைக் காணாமே நீங்குமாறு அடியேனை விலக்குதல் விருப்புடையதோ! ஒழுகொளி மணிவேய்ந்த கரகம துறுபால்மை விழிமனை யவள்வார்ப்ப வெற்பிறை நினதாள்கள் கழுவினன் மலர்தூவி வழிபடல் காணாமே அழிவுற அடியேனைத் தள்ளுதல் அறனேயோ. 272 | படர்கின்ற ஒளியுடைய மணிகள் பதித்த பொற்கரத்தில் உள்ள பாலை மையுண்டகண்ணினையுடைய மேனாதேவி ஒழுகவிட மலையரையன் தேவரீருடைய திருவடிகளைக் கழுவினனாய் மலர்களைத் தூவி அருச்சனை புரிதலைக் காணாமல் மெலிவுறும்படி அடியேனைப் புறம்போக்கல் அறச்செயல் ஆமோ! காரொடு நிகர்கூந்தற் கன்னியை மலைவேந்தன் நீரொடு நின்கையில் உதவிடு நிறைகோலம் ஆரொடு மதிவேய்ந்த அங்கண காணாமே பேரிடர் உறஎன்னைத் தள்ளுதல் பெட்பேயோ. 273 | |