664காஞ்சிப் புராணம்


கன்னிப் பெண்கள் காதல் மயக்கம் மிகும்படி திருவீதியில் எழுந்தருளும்
மணக்கோலத்தால் ஆம் புத்தழகை நோக்காமே வெறுவியேனாக
அடியேனைத் தள்ளுதல் ஊழேயோ!

மரகத வடிவாளும் மழவிடை அனையாயும்
ஒருமணி யணையும்பர் இனிதுறை உயர்கோலம்
இருவிழி களிகூரப் பருகுவ தில்லாமே
பரிவுற அடியேனைத் தள்ளுதல் பாங்கேயோ.       278

     மரகத நிறமுடைய அம்மையும் இள ஏறுபோலும் நீயும் ஒப்பற்ற
மணியினா லமைந்த தவிசின்மேல் இனிதிருக்கும் ஆன்மாக்கள் உயர்தற்கு
ஏதுவாகிய திருமணக்கோலத்தை நோக்கி இருவிழிகளும் களிப்புமிகப்
பருகாதவாறு வருந்துமாறு அடியேனைத் தள்ளுதல் பண்பேயோ!

வந்தனர் மணஞாட்பின் மலரடி தொழுவார்க்குத்
தந்திடும் அருள்நோக்கம் தமியனும் உடன்நின்று
சிந்தையின் மகிழ்வெய்தப் பெறுவது செய்யாமே
நைந்திட அடியேனைத் தள்ளுதல் நலமேயோ.      279

     திருமணக் குழாத்துள் வந்து மலரொக்கும் திருவடிகளை
வணங்குவார்க்கு வழங்கும் திருவருட் பார்வையைத் தனியனும் அவருடன்
கூடியிருந்து சிந்தை களிப் பெய்தப் பெறாமே வருந்திட அடியேனைத்
தள்ளுதல் நலமேயோ!

அன்றியும் உயர் காஞ்சிப் பதியினில் அடியேற்கு
மன்றநின் அணிமைக்கண் வைகிட வரம்ஈந்தாய்
இன்றது தனைமாற்றி எழில்வளர் பொதியத்திற்
சென்றினி துறைநீஎன் றருளிய செயல்என்னே.     280

     மேலும், உயர்ந்த காஞ்சிமாநகரில் நின்னருகில் அறுதியாகத் தங்கிட
அடியேனுக்கு வரமளித்தனை. இப்பொழுது அதனை மாற்றி அழகுடைய
பொதிகை மலையில் சென்று இனிது தங்குக நீ என்றருளிய ஆணை
என்னேயோ!

என்னையும் உடையாய்நின் திருவருள் இதுவோஎன்
றின்னன பலபன்னி இருவிழி புனல்வார
அந்நிலை நனிஏங்கி அழுதழு தயர்வெய்தும்
தன்னிகர் தமிழ்வாய்மைத் தலைவனை எதிர்நோக்கி.    281

     என்னையும் அடிமையாக உடையவனே! நின் திருவருள் வெளிப்பாடு
என்னளவில் இவ்வளவேயோ! என்றிவைபோல்வன பலவும் பன்முறை
பெரிதும் இரங்கி அழுதழுது தளர்ச்சியடையும் தன்னையே தனக்கு
ஒப்பாகிய தமிழ்க்கு உண்மைத்தலைவராகிய அகத்தியரை எதிர்நோக்கி,