| அறுசீரடி யாசிரிய விருத்தம்	 		| சுவலிற்றாழ் குதம்பைக் காதிற் சுந்தரர் அருளிச் செய்வார் அவலித்தல் வேண்டா கேட்டி அருந்தவக் கிழவ ஞாலம்
 செவிலித்தாய் என்ன ஓம்பும் தீம்புனற் கன்னி நாட்டில்
 தவலிற்றீர் வேறு காஞ்சி சமைத்தும்உன் பொருட்டு மாதோ.  282
 |       தோள்மேல் தோயுமாறுள்ள கடிப்பிணையை அணிந்த காதுகளை    யுடைய அழகர் அருள்செய்வார் ‘அரிய தவத்திற்கு உரியோனே! துன்புறுதல்
 வேண்டா. கேட்பாயாக. உலகுயிர்களைச் செவிலித்தாய் (வளர்க்கும் தாய்)
 போல ஊட்டி வளர்க்கும் இனிய நீர் பெருகும் பாண்டிய நாட்டில்
 அழிவில்லாத வேறோர் காஞ்சியை உன்பொருட்டுப் படைப்போம்.’
 		| அத்தலைக் காஞ்சி யூரும் எமக்குமிக் கினிதாம் அங்கண் இத்தகு சிறப்பு வாய்ப்ப யாம்புனை வதுவைக் கோலம்
 உத்தமக் கிழத்தியோடும் உனக்கெதிர் காட்டுகின்றாம்
 மெய்த்தபேரு வகை பூப்ப விழியுறக் காண்டி மற்றும்.    283
 |       ‘அவ்விடத்துள்ள காஞ்சி மாநகரும் எமக்குப் பெரிதாகும். இத்துணை    உயர்வும் விளங்க யாம் இங்கு மேற்கொள்ளும் திருமணக் கோலத்தை
 உத்தம வாழ்க்கைத் துணைவியாகிய உலோபா முத்திரைக்கும் உனக்கும்
 எதிர்காட்டுவோம். பெருமகிழ்ச்சி உண்மையே மலரக் கண்க ளாரக் காணுதி,
 மேலும்.‘
 		| கருதிநீ வரங்கள் பெற்ற வடநகர்க் காஞ்சி மாட்டும் வருமுறை யாண்டு தோறும் பஞ்குனித் திருநாள் மல்கத்
 திருவிழா முடிவின் மன்றற் செய்கையும் எமக்குண்டாக
 அருள்புரிந் திடுதுங் கண்டாய் அறிவநீ மகிழு மாற்றால்.  284
 |       ‘நீ எண்ணிய வரங்கள் பெறற்கு இடனாகிய தொண்டை நாட்டுக்     காஞ்சி நகரினும் வருகின்ற முறைமையை யுடைய வருடந்தோறும் பங்குனித்
 திருநாள் சிறக்கத் திருவிழா நிகழ்ந் ததன் முடிவில் உத்திர நாளில் திருமண
 நிகழ்ச்சியும் எமக்குண்டாவ தாக! அறிஞனே! நீ மகிழும் வகையால்
 அருளுதும் காண்பாயாக.’
 		| என்றிவை உலக மெல்லாம் உய்யுமா றியம்பி வேளை வென்றவர் தழுவித் தேற்றி விடைகொடுத் தருளப் பெற்று
 வன்றிறல் முனிவர் கோமான் மகிழ்ந்தடி வணங்கிப் போந்து
 தன்றுணைக் கிழத்தி யோடுஞ் சையமால் வரையைச் சார்ந்தான்.	285
 |       என் றிவற்றை ஆன்மாக்கள் கடைத்தேறுமாறு காமனைக் காய்ந்தவர்.     கூறித் தழுவித் தெளிவித்துச் செல்ல விடுப்ப அகத்தியர் உலோபா
 முத்திரையுடன் அருள் பெற்று வணங்கிக் காவிரி உற்பத்தி யாகும்
 சையமலையைச் சார்ந்தனர்.
 |