666காஞ்சிப் புராணம்


     சலம்ப டைத்தவா தாவிவில் வலன் றனைச் சவட்டிய
பெருநோன்பின், வலம்ப டைத்தவன் அவ்வரை அணுகலும் மறிதிரைக்
கடலாடை, நிலம்ப டைத்தது தொன்னிலை யாவரும் நிறைபெருங்
களிகூர்ந்தார், நலம்ப டைத்தசீர் உறுவனும் ஆயிடை வதிந்துதென்
மலைநண்ணி.                                         286

     வஞ்சமுடைய வில்வலன் வாதாவி (அசமுகி மக்கள்)யை அழித்த
பெரிய விரதங்களான் வலிமை பெற்ற அகத்தியர் அச் சைய மலையைச்
சேர்ந்த அளவே உலகம் பழைய சம நிலையை எய்தியது. யாவரும்
பெருங்களி கூர்ந்தனர். நலமுடைய சிறப்பமைந்த முனிவரும் அங்கு
வதிந்து பின்பு பொதிகை மலையை நண்ணி.

     தெனாது காஞ்சியும் உத்தர காஞ்சியும் நித்தலும் சென்றேத்திப்,
பினாக பாணியார் திருமணங் கண்ணுறப் பெற்றுளங் களிப்பெய்தித்,
தனாது பத்தியால் அணிபெறத் தொடுத்திடுஞ் செந்தமிழ்ப் பாமாலை,
மனாதி யாலுணர் வரியவர் இணையடி மலர்மிசைப் பலசாத்தி.    287

     பாண்டிய நாட்டுக் காஞ்சியையும், தொண்டை நாட்டுக் காஞ்சியையும்
நாடொறும் சென்று தொழுது துதித்துப் பினாகம் என்னும் வில்லைத்
திருக்கைய ராகிய சிவபெருமானார் திருமணத்தைக் கண்டு உள்ளம் களிப்பு
மிக்குத் தனது மெய்யன்பால் அழகு பெறத் தொடுக்கப்படும் செந்தமிழ்ப்
பாமாலைகளை மன முதலியவற்றைக் கடந்தவர் துணையடி மலர்கள்மேல்
பலவாகச் சாத்தி,

     தென்றற் பிள்ளையை வயிறுளைந் தீன்றுதீம் பொருநைநீர்
குளிப்பாட்டி, மன்றற் சந்தனப் பொதும்பரின் தமிழொடு வளர்த்துமென்
மெலஞால, முன்றிற் பால்விளை யாடவிட்டமர்முது
மலயவெற்பினுஞ்சையக், குன்றத் தும்அகத் தீசத்தும் முறைமுறை
குலவிவீற் றிருக்கின்றான்.                               288

     தென்றலாகிய குழவியை வயிறு நொந்து பயந்து தாமிர வன்னியின்
இனிய நீரில் முழுக்காட்டி மணம் கமழும் சந்தனச் சோலையில்
இனிமையோடும் வளர்த்துப் பையப் பைய உலகமாகிய முற்றத்தில்
விளையாட விடுத்து விரும்பு பொதிகை மலையினும் சைய மலையினும்,
அகத்தீசத்தினும், முறையாகச் சென்று சென்று விளங்கி வீற்றிருக்கின்றனர்.

     இன்ன தாம்அகத் தீச்சரம் வந்தவா றிவ்விடைப் பணிந்தேத்தி,
அன்னம் அன்னவள் மண்டபம் மாளிகை அங்கணம் ஆங்காங்குத்,
துன்னு வந்திகர் கணாதிபர் வாயில்காப் புடையவர் தொழப்போந்து,
மன்னு மாமுதல் இடவயின் மத்தள மாதவேச் சர்ரங்கண்டாள்.    289