| இவ்வ ரைப்பிடை நித்தலும் படகம்நீ எழுப்பிட வரம்பெற்றாய், செவ்வி மத்தளம் முழக்கவும் விழைதியேல் செப்புதும் இதுகேட்டி. அவ்வி யத்தொகை அறஎறிந் துயரிய ஆன்றவர் குழுப்போற்றும், கௌவை யம்புனற் காஞ்சியை முன்பு போற் கதுமெனச் சென்றெய்தி. 293 ‘இங்கு நாடொறும் படகம் முழக்குதற்கு வரம் பெற்றனை, இனிய மத்தளமும் முழக்க விரும்புவை ஆயின், கூறும் இதனைக்கேள்; காமக் குரோதக் குழாத்தை வேரொடும் களைந்து சிறந்த சான்றோர் குழாம் பாராட்டும் ஒலியுடைய நீர் தழுவிய காஞ்சியை முன்பு போல விரைந்தடைந்து, அங்கண் மத்தள மாதவேச் சரனென அருட்குறி நிறீஇப் போற்றிப், பொங்கும் அன்பினால் விதியுளி அருச்சனை புரிகுதி மற்றாங்கே, துங்கம் நீடிய பரவெளிப் பிலத்தயற் சூழலின் எஞ்ஞான்றும், தங்கு காப்புடை நடமெனப் பெயரிய தாண்டவம் புரிகின்றேம். 294 அங்கு மத்தள மாதவேசர் எனப் பெயரிய சிவலிங்கம் பிரதிட்டை செய்து அருச்சனை அன்பொடும் விதிப்படி போற்றுவாய். அவ்விடத்தே உயர்வு மிக்க அருள் வெளியாகிய பிலா காசத்தினைஅடுத்த வைப்பிலே எக்காலத்தும் காப்புப் பொருந்திய தாண்டவத்தைப் புரிகின்றோம். செல்வம் மல்கும்இத் தில்லைநீள் வனத்திடைத் திருச்சிற்றம்பலம் ஒன்றே, சொல்லி றந்தொளிர் பரவெளி எனப்படும் சுரிவளைக் குலம்ஆர்க்கும், மல்லல் நீர்த்தடம் புறம்பணை வேலிசூழ் வளம்பொழில் திருக்காஞ்சி, எல்லை யுட்படு வரைப்பகம் முழுவதும் பரவெளி எனத்தேறாய். 295 செல்வம் பல்கும் இத்தில்லை மரங்களையுடைய காட்டகத்தே திருச்சிற்றம்பலம் (நுண்வெளி) ஒன்றுதானே வாக்கினைக் கடந்து மிளிரும் அருள்வெளி எனப்படும். சுரிந்த சங்குகள் முழங்கும் வளமுடைய நீர் நிலைகளும், வயல்களும் சோலைகளும் புடை யுடுத்த திருக் காஞ்சி வரைப்பிடம் முழுவதும் பரவெளி எனத் தெளிதி. ஆதி அந்தமும் இல்லதோர் மெய்யறி வானந்த நிறைவாகுஞ், சோதி நந்தமைத் தம்மனக் குகையினுந் தொழுபவர் கருத்தீமை, காது காஞ்சியாம் பரவெளித் தலத்தினுங் காண்டகப் பெறுவோரே, ஓதி முற்றுணர் உறுவரும் பெறலரும் வீட்டினை உறுவாரால். 296 |