யவர்க்கும் விற்பதல்லது அதற்கு ஆவார் ஆகாதாரென்னும் வரைவிலாத மகளிரது இயல்பு; உயர்ந்தோர் இழிந்தோ ரென்னாது விலை கொடுப்பார் யாவரையும் முயங்கும் மகளிர் (திருக். 92 அதி. பரி) பூத்தபின் இராறு நாளுங் கிழத்தியர்ப் புணர்ந்து தம்மை நீத்தன ரெனுஞ்சீற் றத்தால் நின்றஈ ரொன்பான் நாளும் ஏத்தும்ஆ டவரைத் தங்கள் இளமுலைத் துருக்கம் ஏற்றிப் பாத்திரு நிதிய மெல்லாம் பறித்தனர் கொள்ளை கொள்வார். 51 | பூத்து நீராடியபின் பன்னிரண்டு நாளும் தலைவியரைக் கூடியிருந்து தம்மை நீக்கினர் என்னும் கோபத்தால் எஞ்சிநின்ற பதினெட்டு நாளும் தம்மைப்புகழ்கின்ற தலைவரைத் தங்கள் இளங் கொங்கைளாகிய மலை மேற்கோட்டையில் ஏற்றிப் பெரும் பொருள் முழுதும் பறித்துக் கொள்ளை கொள்வா ராவர். பூத்து நீராடியபின் பன்னிரு நாட்கள் தலைவி கருத் தரிக்குங் காலமாகலின் அவ்வளவும் தலைவன் தலைவியைப் பிரியான் என அகப்பொருள் இலக்கணம் கூறும். ‘பூப்பின் புறப்பா டீராறு நாளும், நீத்தகன் றுறையா ரென்மனார் புலவர், பரத்தையிற் பிரிந்த காலையான’ (தொல். பொருள். 187) என்பதனானும் அறிக. துருக்கம்-மலைமேற்கோட்டை. இருநிதி- கொடுக்கக்குறையாத பெருஞ்செல்வம். பாத்து-பல் பொருளாக வழி வகுத்து. கொள்ளை-கொள்ளுதல்; தாமொன்றும் கொடாது கொள்ளுதலைக் குறிக்கும். கோலத்தின் இசையின் யாணர்க் கூத்தினின் அவிந யத்திற் சீலத்தின் கலவிச் செய்கைத் திறத்தினின் பிறவாற் றானும் ஞாலத்து மைந்தர் தம்மை மருட்டிநற் பொருள்கள் வவ்விக் காலுற்ற சாற்று வேழக் கோதுபோல் கழிய நீப்பார். 52 | அழகு, இசை, அழகிய கூத்து, பாவனை, ஒழுக்கம், புணர்ச்சிக் கூறுபாடுகள் எனும் இவற்றானும் பிறவழியானும் உலகினிடத்து இளைஞரை மயக்குறுத்திப் பெரும் பொருள்களைக் கவர்ந்து சாற்றினை உமிழ்ந்த கரும்பின் கோதுபோல அகலக் கைவிடுவார். அவிநயம்-உறுப்புக்களால் தோற்றுவிக்கும் குறிப்பு. மைந்தர்-வன்மையார்; (பின் வன்மையிலர் ஆவர்) வேழம் கரும்பு விசேடம். மேற்பாடலில் வந்த ‘பாத்து’ அழகு முதலியவற்றால் பகுத்து எனவும் ஆம். அலகில்நல் லறஞ்சூழ் காஞ்சி அமர்பெருஞ் செல்வராயுங் குலமுறைச் சார்பால் வெந்நோய்க் கோட்பட்டார் இழிஞ ரேனுஞ் சிலகொடுப் பனவுங் கொண்டு சேர்ந்துபொய் வஞ்ச மெல்லாம் நிலைபெற அடைத்து வைத்த நெஞ்சின ராகி வாழ்வார் 53 | அளவில்லாத நல்லறம் சூழ்ந்த காஞ்சியில் நிலைபெற்ற பெருஞ் செல்வராகப் பிறந்தும் பொருட் பெண்டிர் தாம் தோன்றிய குலத்திற்குரிய தொடர்பினால் பெருநோயுடைய ரெனினும், கடைஞரெனினும், சில கொடுப்பினும் கொண்டு கூடிப் பொய், வஞ்சகம், அவற்றின் இனமான பிறவும் செறித்து நிலைபெற வைத்த நெஞ்சினராகி வாழ்வார். |