670காஞ்சிப் புராணம்


இறைவன் காப்புநடனங் காட்டுதல்

கலிநிலைத் துறை

போக்க ருந்தவம் பற்பகல் புரிந்துபே ரன்பு
தேக்கு சிந்தையான் மீச்செலத் திருவருள் வழங்கி
வாக்கும் உள்ளமும் தொடர்வரு வள்ளலார் முழுதும்
காக்கு நாயகர் காட்டினர் காப்புநன் னடனம்.       300

     குற்றமற்ற தவத்தைப் பன்னெடு நாள் செய்து பேரன்பினைப்
பெருக்கிய சிந்தையராகிய திருமாலிடத்துத் திருவருள் தங்க வழங்கிப் பாச
பசு ஞானங்களால் பற்றலாகாத வள்ளலார் பல்லுயிர்களையும் காக்கும் சர்வ
ரட்சா நடனத்தை அவர்க்குக் காட்டினர்.

வீங்கி ருட்பிழம் பள்ளிவாய் மடுத்துவெங் கதிர்கான்
றோங்கு செங்கதிர் ஆயிரம் ஒருவழிக் குழுமி
யாங்கு வில்லுமிழ் அற்புதப் பொலஞ்சுடர்ப் பொதுவின்
பாங்கர் எங்கணும் படரொளி விரிகதிர் பரப்பி.     301

     செறிந்த இருட் குழாத்தை முகந்துண்டு வெவ்விய கிரணத்தை
உமிழ்ந் துயர்கின்ற சூரியர் ஆயிரவர் ஓரிடைக்கூடினாற் போல ஒளி வீசும்
ஞானமாகிய அழகிய அம்பலத்தில் பக்கம் எங்கும் செல்கின்ற ஒளிவிரிக்கும்
கதிர்களைப் பரப்பி,

அனைய மன்றினுக் கரும்பெறல் அணியெனக் கவின்று
புனையும் நீற்றொளி வயங்கிய திருவுருப் பொலிய
வினைஇ கந்தவர் விள்ளருஞ் சரண்மிசை வீக்குங்
கனைம ணிக்கழல் கலின்கலின் கலினெனக் கறங்க.   302

     அவ்வம்பலத்திற்குப் பெறலரிய அணிபோல அழகு செய்து புனையப்
பெறும் திருநீற்றொளி விளங்கிய திருவுரு விளங்கவும், மெய்யறிவினர்
விடுதற்கரிய திருவடிகளில் செறிக்கப் பெற்ற ஒலிக்கும் வீரக் கழல் கலின்
கலின் கலின் என்னும் ஒலி யெழவும்,

வார்ந்த செஞ்சடை மாதிரம் எட்டினுஞ் சுலவ
ஆர்ந்த தெய்வதக் கங்கையா றலம்பிநீர் துளிப்பக்
கூர்ந்த இன்னருட் குறுகை இளநிலா முகிழ்த்துச்
சார்ந்து போற்றெடுத் திசைப்பவர் தம்உயிர் பருக.   303

     நீண்ட செஞ்சடை திசைகள் எட்டினும் சுழலவும், பொருந்திய
கங்காநதி நீர் ஒலித்துத் திவலைகள் சிந்தவும், இனிய அருள் மிகுந்த
புன்னகையின் இள நிலவு அரும்பிச் சார்ந்து துதி செய்வோர் தம் உயிரைக்
கொள்ளை கொள்ளவும்.

கஞ்ச வாண்முகம் மலர்தரக் கட்கடை கருணைப்
பஞ்சி னேரடிப் பனிவரைப் பிராட்டிபால் நடப்ப
அஞ்சு பூதமும் படைத்தளித் தழிக்கவும் வல்ல
துஞ்ச ரும்புகழ்க் குறட்கணந் துணங்கையாட் டயர.  304