672காஞ்சிப் புராணம்


வீழ்ந்தெ ழுந்துளம் மகிழ்ந்துபே ரின்பவெள் ளத்தின்
ஆழ்ந்து பன்முறை பணிந்துபோற் றிசைப்புழி அவற்கு
வாழ்ந்த பேரருட் கருணையான் மத்தளம் முழக்கப்
போழ்ந்த வெண்மதிக் கண்ணியார் திருவருள் புரிந்தார்.   309

     பணிந்தெழுந்து மனம் மகிழ்ந்து பெரிய இன்ப வெள்ளத்தில் மூழ்கிப்
பலமுறையும் பணிந்து போற்றுகையில் அத் திருமால் பொருட்டுத் தோன்றிய
பேரருட் கருணையினால் கீ்ற்று வெண்மதியைக் கண்ணியாகவுடைய
சிவபிரானார் மத்தளத்தைமுழக்கத்திருவருளைச் செய்தனர்.

நீண்ட மேனியான் நிறைபெரு மகிழ்ச்சியில் திளைத்துத்
தாண்ட வந்தனக் கிசையமத் தளஇயம் முழக்கி
மாண்ட குந்திறல் மத்தள மாதவ னானான்
வேண்டு மெய்வரம் அவன்பெற அளித்தனர் விமலர்.    310

     நெடியவ ராகிய திருமால் பேருவகையிற் றுளைந்து கூத்திற் கேற்ப
வாச்சியம் ஆகிய மத்தளத்தை முழக்கி மாட்சியையுடைய ஆற்றலினால்
மத்தள மாதவர் என்னும் பெயருடையர் ஆயினார். விரும்பிய நல்வரத்தை
அவர் எய்துமாறு விமலர் வழங்கினர்.

அச்சு தன்பெறு வரத்தினால் அன்றுதொட் டென்றும்
கச்சி வைப்பினின் மத்தளங் கறங்குபே ரோதை
முச்ச கத்தையும் நிறுத்திட முழுவதும் புரக்கும்
பச்சி ளங்கொடி பாகனார் திருநடம் பயில்வார்.    311

     திருமால் பெற்ற வரத்தினால் அன்று முதலாக என்றும் காஞ்சிமா
நகரில் மத்தள முழக்கு பேரொலியொடும் மூவுலகையும் காத்திடப் பல
கோடி அண்டங்களையும் காக்கும் பசிய இளங்கொடியாரைப் பங்கிலுடையவர்
திருக்கூத்தனைப் புரிவார்.

காப்பு நன்னடங் கண்ணுறப் பெற்றவர் கரும
யாப்பு வீழ்த்துயர் வீடுபே றெய்துவர் பிறவி
ஒப்பு மத்தள மாதவேச் சரம்இது உரைத்தாம்
வாய்ப்பு றுந்தவக் கொள்கையீர் மேல்இனி வகுப்பாம்.   312

     காத்தலைச் செய்கின்ற நல்ல நடனத்தைக் கண்டு தரிசனஞ்
செய்தோர் வினை விலங்கினை முறித்து உயர்ந்த வீடு பேற்றினை அடைவர்.
பிறவியை ஓட்டுகின்ற மத்தள மாதவேச்சரத்தினைப் பற்றிப் பேசினோம்.
வாய்ப்பு மிகுந்த தவ வொழுக்கம் உடையீர்! இனி முன்னதனை
வகுத்துரைப்போம்.

அம்மையார் மண்டபத் தெழுந்தருளல்

எம்பி ராட்டிஅங் கிறைவரைத் தொழுதுபோற் றிசைத்து
நம்பு காதலின் தோழியர் குழாததொடு நடந்து
கம்ப நாயகர் திருவருட் பெருமையே கருதிச்
செம்பொன் வேய்ந்தொளி பிறங்குமா மண்டபஞ் சேர்ந்தாள்.