என்று மந்தரப் பறம்புறை எம்பிரான் விடுப்ப மன்ற இந்நகர்க் கெய்தினன் வளரிள முலையீர் இன்று நான்புரி பூசனைக் கிசையஎன் பணியில் நின்று வேண்டுவ தம்மின்என் றுணர்த்தினள் நிமலை. 318 | என்றருளி மந்தர மலையில் எழுந்தருளும் எமது பெருமானார் விடுத்தலால் தெளிவுற இந்நகரை அடைந்தேன். சேடிகாள்! மாறுபடாது நின்று வேண்டும் உபகரணங்களை வருவித்துத் தாருங்கள்’ என்று இயல்பாகப் பாசங்களின் நீங்கிய விமலை கூறினர். உரைத்த வாய்மொழி கேட்டலும் உளங்களி துளும்பி விரைத்த கூந்தலார் மென்மல ரடிதொழு தெழுந்து திரைத்த பாற்கடல் அமிழ்தனாய் செய்பணி வெவ்வே றரத்த வாய்திறந் தெங்களுக் கருளென அருள்வாள். 319 | கூறிய திருவாக்கைக் கேட்டு மனம் களிப்புமிக்கு ஏலவார் குழலியார்தம் மெல்லிய மலரடிகளைத் தொழு தெழுந்து அலைகளையுடைய பாற்கடலில் பிறந்த அமிழ்தம் போல்வாய்! அவரவர் செயத்தகும் பணியைச் சிவந்த இதழினையுடைய திருவாய்மலர்ந்து அருளுக’ என, அருள் செய்வார், அம்மையார் தோழியர்களுக்குப் பணித்தல் அறுசீரடி யாசிரிய விருத்தம் சீலந் தாங்குவிண் ணவரும் விழைதகு தீம்புனற் கூவல் காலந் தோறும்யான் ஆடிக் கருமம் இயற்றுதற் கொன்றும் ஆலந் தாங்கிய கண்டத் தடிகளுக் காட்டுதற் கொன்றும் ஏலந் தோய்ந்திருள் கூரும் ஈர்ங்குழ லவர்சிலர் அகழ்மின். 320 | ஆறு காலங்களிலும் யான் நீராடிக் கடன்களை முடித்தற்கு நல்லொழுக்கமுடைய தேவரும் விரும்பத்தக்க இனிய நீர்க்கிணறு ஒன்றும், விடத்தை அணிந்த பெருமானார்க்குத் திருமுழுக் காட்டுதற்குக் கிணறொன்றும்மயிர்ச்சாந்து பூசிக் கருமைமிகும் நெய்ப்புடைய கூந்தலீர் சிலர்தொடுமின், அலைகள் வெண்மணிவீசி அதிர்புனல் நதிக்கரை அருரு மலர்கள் பச்சிலை கனிகள் மல்கிய மயிலைவில் லந்தண் பலவும் ஆதிய பலவும் பயில்வுறு நந்த வனங்கள் இலைமு கப்பொலம் பூணின் எழுமுலை யவர்சிலர் புரிமின். 321 | திரைக்கரங்கள் முத்துக்களை முகந் தெறியும் நதிக்கரையின் அயலே மலர்கள், பச்சிலைகள், பழங்களின் பொருட்டுப் பல்கிய இருவாட்சி, வில்வம், பலாமரம் முதலான பலவும் கெழுமிய நந்தவனங்களை வெற்றிலைபோலும் முகமுடையபொற்பூணினையுடையீர் சிலர் ஆக்குமின். |