தழுவக் குழைந்த படலம் 675


நறிய சந்தன விழுது நாறிய மான்மதச் சாந்தம்
வெறிகு லாங்கருப் பூரம் விரைகெழு குங்குமம் பிறவும்
செறிவு கொண்டபூங் கதிரின் தெய்வத மணிஅணி விலையிட்
டறிவ ரும்பரி வட்ட மாதிய சிற்சிலர் கொணர்மின்.       322

     நறுமணமுடைய சந்தனக்குழம்பும், மணம்கமழும் கத்தூரிச் சாந்தும்,
மணம் கெழுமிய கருப்பூரமும், மணம் விம்மும் குங்குமப் பூவும், பிறவும்,
விலை மதித்தற்கரிய மொய்யொளியுடைய தெய்வமணி கொடு குயிற்றிய
அணிகளும், திரு ஆடையும் முதலிய சிலர் சிலர் கொண்டு வாருங்கள்.

ஆனின் ஐந்துடன் ஐவே றமுதமும் சிலர்சிலர் தம்மின்
தேன ளாந்திரு வமுது முதலிய சிலர்சிலர் தம்மின்
வான ளாவிய கோயில் மாளிகை எங்கணு மணிகள்
கான ளாமலர் பட்டிற் கவின்நலஞ் சிலர்சிலர் புனைமின்.   323

     பஞ்ச கௌவியமும், பஞ்சாமிர்தமும், சிலர் சிலர் தாருங்கள், தேன்
கலந்த திருவமுது முதலிய சிலர் பதம் செய்ம்மின், வானைத்தோய நின்ற
கோயில், திருமாளிகை முதற் பிறவிடங்களிலும், மணிகளாலும், வாசனை
பொருந்திய மலர்களாலும், பட்டாலும் அழகுற விதான முதலிய அமைமின்.

தோழிமார் தொண்டு

இன்ன வாறிம யத்தின் இளம்பிடி ஏகுத லோடும்
அன்ன தோழியர் பலரும் ஐயென அடியிணை தொழுது
முன்னர் யாம்செய்தும் என்றங் கொருவரின் ஒருவர்முன் முடுகித்
துன்னு காதலின் மூண்டு தொழில்தலை நின்றனர் மன்னோ     324

     இங்ஙனம் இமயத்தின் இளைய பெண் யானையை ஒப்பவர் ஏவிய
உடனே தோழியர் யாவரும் விரைவு தோன்றத் திருவடிகளைத்தொழுது
முன்னர் யாம் முடிப்பேம் முடிப்பேம் என்றங்கே ஒருவரினும் ஒருவர் முன்
முன் என முடுகிச் செறிந்த காதலால் முற்பட்டுத் தொழிலில் தலை நின்றனர்.

தெவ்வடு வேற்கண் உமாபத் திரையொடு கீர்த்தி மதியென்
றிவ்விரு மாதர் வடக்குந் தெற்கும் அகழ்ந்திரு கூவல்
கௌவை நெடுந்திரைக் கங்கை காளிந்தி அங்கண் மடுத்தார்
அவ்விரு தீர்த்தங் குடைந்தோர் அல்லல் பவப்பிணி நீப்பார்.  325

     பகைவரை அழிக்கின்ற வேல் போலும் கண்களையுடைய
உமாபத்திரை, கீர்த்தி மதி என்னும் இருமாதர் முறையே வடக்கிலும்,
தெற்கிலும் தத்தம் பெயரால் கிணறகழ்ந்து அம்மையார் மூழ்குதற்கும்,
இறைவர்க்கு ஆட்டுதற்கும் முறையே கங்கை யமுனை நீரை அவற்றில்
நிரப்பினர். அவ்விரு தீர்த்தங்களின் மூழ்கினோர் துன்பத்தைத் தரும்
பிறவி நோயைக் கெடுப்பார்.