676காஞ்சிப் புராணம்


வார்ந்த நெடுஞ்சடை மோலி ஏகம்ப வாணர் தமக்கு நேர்ந்த திருவமு தாக்க நீடும் அனற்கிறை திக்கின் ஈர்ந்தண் மணிப்புனற் கூவல் இடம்பெறத் தொட்டு வனப்பின் ஆர்ந்த திருமடைப் பள்ளி அமைத்தன ரால்ஒரு சாரார்.        326

     மிக நீண்ட சடை முடியையுடைய திருவேகம்பர்க்குப் பொருந்திய
திருவமுது அமைக்க அக்கினி திசையில் நீலமணியை ஒக்கும் நீருடைய
கிணற்றை அகழ்ந்து பேரழகமைந்த திருமடைப் பள்ளியைச் சிலர் வகுத்தனர்.

நிலவும் எருக்கும் அணிந்த நீள்முடி சாத்திய மேல்பாற்
குலவு நதிக்கரை ஞாங்கர்க் கோதறு தூய வரைப்பிற்
பலருந் தொழத்தகு மேன்மை பயில் அம்பி காவனம் என்னும்
மலர்நிறை நந்த வனங்கள் ஆக்கினர் ஆங்கொரு சாரார்.   327

     பிறையையும், எருக்கம்பூவையும் அணிந்த திருமுடியில் சாத்துதற்கு
மேற்றிசையில் விளங்கும் வேகவதி நதிக் கரை மருங்கில் குற்றமற்ற
நல்லிடத்தே பலரும் தொழுகின்ற மேம்பாடமைந்த அம்பிகாவனம்
எனப்படும் மலர்கள் நிரம்பிய நந்தவனங்களைத் தோற்றுவித்தனர் சிலர்.

நெட்டிலை வாழைக் குலங்கள் நெருப்புறழ் செம்பழப் பூக
மட்டு மதுக்கழை தூணத் தியாத்தவிர் காழ்வடம் நாற்றி
மட்டவிழ் பூந்தொடை தூக்கி வன்ன விதானம் விதானித்
திட்டு மணித்திருக் கோயிற் கெழில்புரிந் தார் ஒரு சாரார்.  328

     நீண்ட இலைகளையுடைய வாழைமரம், பலவும், நெருப்பனைய
பழுக்காய்களைக் கொண்ட பாக்கு மரம் பலவும், சாற்றினை ஊற்றும்
கரும்பு பலவும் தூண்களில் கட்டி ஒளி விடுகின்ற முத்து மாலைகளைத்
தொங்கவிட்டுத் தேன் மணம் கமழும் மலர்மாலைகளை நாலவிட்டு
நிறமுடைய மேற்கட்டி விரித்து யாத்து மணிகள் பதித்த திருக்கோயில்களை
அழகு செய்தனர் சிலர்.

வாசக் கொழும்புழு கப்பி வண்ண மலர்த்துகள் அட்டி
வீசிச் செழும்பனி நன்னீர் விரைகமழ் தீம்புகை யேற்றிக்
காசைத் தகர்த்துக் கரைத்துக் கவின்திரு மாளிகைச் சுற்றும்
ஆசைச் சுவர்த்தலம் முற்றுஞ் சித்திரித் தார்ஒரு சாரார்.  329

     வளமும், வாசமும் உடைய புனுகைப் பூசி நிறமுடைய மலர்த்
தாதுகளை ஒற்றி நறிய பன்னீரைத் துளித்து அகில் முதலாம் நறும்
புகையைச் சேர்த்தி நவமணியையும் பொன்னையும் இடித்துக்குழைத்து
அழகிய திருமாளிகைச் சுற்றில் உள்ள நாற்றிசைச் சுவர்களிலும் சித்திரம்
தீட்டினர் சிலர்.