தழுவக் குழைந்த படலம் 677


வீறும் விரைப்பாளி தங்கள் வெறுவிய வல்சிஅக் காரச்
சோறு புளிந்தயிர்ச் சொன்றி துப்புடை ஏனைப் புழுக்கல்
நாறு நறுங்குய்க் கருனை முதலிய நால்வகை உண்டி
ஆறு சுவைத்திறம் விம்ம அட்டன ரால்ஒரு சாரார்.   330

     சிறக்கும் கருப்பூரம் முதலிய மணம் கமழும் பாற்சோறு, வெண்சோறு
(சுத்த அன்னம்), சருக்கரைப் பொங்கல், புளிப்புடைய தயிர்ச்சோறு,
நுகரப்படும் ஏனைய சோறுகள், வாசனை வீசும் தாளிதம் கூட்டிய பொரிக்கறி
முதலிய நக்கல், பருகல், தின்னல், விழுங்கலாகிய நால்வகை உணவு
அறுவகைச் சுவை வேறு பாடுகளும் மேம்படச் சமைத்தனர் பலர்.

ஓட்டொழி யாநறுந் தேறல் ஒண்மலர் குற்றனர் கொண்டு
சூட்டொடு கண்ணிகள் இண்டை தொங்கல் முதற்பல ஆக்கி
ஈட்டு நறும்புகை ஏற்றி ஈர்ம்பனி நீர்தெளித் தம்பொற்
சேட்டொளி மூழி அமைத்துச் சேர்த்தன ரால்ஒரு சாரார்.  331

     நறிய தேன் பெருக்கு அறாத செவ்வி மலர் பறித்துக் கொண்டு சூட்டு,
கண்ணி, இண்டை, தொங்கல் முதலிய மாலை வகைகள் பலவும் தொடுத்துத்
தொகுக்கப்பட்ட நறும்புகை பலவற்றையும் ஊட்டி ஈரிய பனிநீரைத்
தெளித்துத் தூரத்தும் ஒளிபரவும் மாற்றுயர் பொன்னாற் செய்த பூவிடு
பெட்டிகளில் வைத்துக் கொண்டுசேர்த்தனர் பலர்.

செம்பொன் இழைத்த தசும்பில் தெய்வத மந்திரம் ஓதி
அம்பொன் இழைத்துகில் வாய்ப்பெய் தலைஏறி தீர்த்தம் வடித்துச்
கொம்பின் ஒசிந்தனர் கொண்டு குளிர்மணிக் கோயிலி னுள்ளால்
பம்பு நிறைகள் நிறையப் பாய்த்தின ரால்ஒரு சாரார்.       332

     செம்பொன்னா லாகிய குடங்களில் தெய்வத்தன்மை நிரம்பிய
மந்திரங்களை ஓதி அழகிய பொன்னூல் கலந்த நுண்ணிய ஆடையால்
வாயை மூடி அலை வீசும் தீர்த்த நீரை வடிகட்டிப் பூங்கொம்பு போல
ஒல்கிச் சுமந்து குளிர்ந்த ஒளி வீசும் மணிகள் பதித்த கோயிலுள் செறிக்
கப்படுகின்ற நிறைகள் எனப்படும் சால்களில் நிரப்பினர் ஓர் குழுவினர்.

சுடர்விடும் ஆடகச் செம்பொன் தூமணி வட்டகையோடு
படலிகை யாதிகள் சுத்தி பண்ணி அமைத்து நறும்பூ
அடைதளிர் யாவையும் ஆய்ந்தங் கார்த்தி மணத்தஏ லாதிக்
கடிதிரு மஞ்சனம் அட்டிக் களிமிகுந் தார்ஒரு சாரார்.    333

     ஆடகப் பொன்னாலியன்ற மணிபதித்த சிறுகுவளைகள், பூந்தட்டம்
முதலிய தூய்மை செய்து இருத்தி நறிய மலர்கள், இலைகள் தளிர்கள்
ஆகிய இவற்றைத் தூய்மைப் படுத்தி அவற்றுள் இட்டு மணமுடைய ஏலம்,
வெட்டிவேர், குங்குமப்பூ, பச்சைக் கருப்பூரம் முதலியவற்றை விளக்கமும்,
காப்பும் அமைந்த திருமுழுக்கு நீரிற் பெய்து நன்கு முடித்தமையால்
களிப்புற்றனர் சிலர்.