678காஞ்சிப் புராணம்


தூங்கு பலாக்கனி தாற்றுத் தூத்திரள் வாழைப்ப ழங்கள்
மாங்கனிக் குப்பை நரந்தம் மாதுளை நாரெலு மிச்சை
தேங்கமழ் தெங்கின் குடக்காய் தீப்படு பூகப் பழுக்காய்
ஆங்கண் நிரப்பினர் கைக்கொண் டணுகின ரால்ஒரு சாரார்   334

     பலாவிற் றொங்குகின்ற பழங்களும், தாறுகளிற் றூய்தாய்த் திரள்கின்ற
வாழைப்பழங்களும், மாவின் கனித்தொகைகளும், ஆகிய முக்கனிகளும்
நாரத்தை, மாதுளை, மணங்கமழ் எலுமிச்சை இவற்றின் பழங்களும் இனிமை
மிகுந் தெங்கின் குடம்போலும் இளநீர்களும், சுவைமிகும் பாக்குப் பழங்களும்
சேமித்துக் கைக்கொண்டங் கணுகினர் ஒருசிலர்.

ஆனுடைப் பாற்குடங் கோடி அருஞ்சுவை நெய்க்குடங் கோடி
தேனுடைப் பொற்குடங் கோடி செழுங்கரும் பட்டதண் சாறு
தானிறை பொற்குடங் கோடி தயிருடைப் பொற்குடங் கோடி
வானமிழ் தக்குடங் கோடி வல்லைஉய்த் தார்ஒரு சாரார்.    335

     பசுப்பாலும், அரிய சுவையையுடைய நெய்யும், தேனும், கரும்பாட்டிக்
கொண்ட சாறும், தயிரும், தேவாமிர்தமும் ஒவ்வொன்றும் பொற்குடங்களில்
கோடி யென்னும் அளவுபட விரைவில் தொகுத்தனர் ஓர் குழாத்தினர்.

திருமலி ஓவியப் பட்டும் தீபத் தியன்றவெண் பட்டும்
குருமலி பாசிலைப் பட்டும் கோபம் நிகர்த்தசெம் பட்டும்
உருவுடை மாழையம் பட்டும் ஒளிர்தரு நீனிறப் பட்டும்
தருஉத வும்பல பட்டும் தந்தன ரால்ஒரு சாரார்.        336

     விலை மிக்க சித்திரங்கள் தைக்கப்பெற்ற பட்டுடையும், பல தீவுகளில்
முடித்த வெண்பட்டாடையும், நிறமிகுந்த பசிய இலை நிறப் பட்டாடையும்,
இந்திர கோபப் பூச்சியை நிகர்த்த செம்பட்டுத் துணியும், அழகிய
பொன்னிறத்த பட்டுடையும், நீல நிறப் பட்டுடையும், கற்பகத் தரு உதவிய
பட்டாடையும் ஓர் குழுவினர் கொண்டு தந்தனர்.

விற்படு மோலி குதம்பை மின்உமிழ் பொன்அணி பட்டம்
அற்பகை விள்ள விளங்கும் அங்கதம் ஆழி கடகம்
பற்பல கண்டத் தணிகள் பாயொளி ஆரம் முதலாம்
கற்பகம் உய்த்தன கொண்ட கடுகின ரால்ஒரு சாரார்.    337

     ஒளி விடுகின்ற மணி முடியும், கடிப்பென்னும் தோளிற் றாழ்
காதணிகளும், ஒளி விடு பொன்னானியன்ற அழகிய நெற்றிப் பட்டமும்,
இருளாகிய பகை கெட ஒளிரும் தோளணிகளும், விரலணிகளும், கடகங்களும்,
கழுத்தணிகளும், பரவுகின்ற ஒளியுடைய முத்த மாலைகளும் பிறவும் தேவதரு
வழங்கிய அவற்றைக் கொண்டு விரைந்து வந்தனர் ஒருசிலர்.