முழுதுல குங்கமழ் கிற்கும் முருகுடைச் சந்தனத் தேய்விற் புழுகினை வாக்கி நுணங்கப் பொடித்திடு கப்புரம் அட்டிச் செழுவிய குங்குமம் பெய்து செறிவுற மட்டித் தெடுத்த விழுதமை பொற்குடம் ஏந்தி விரைந்தன ரால்ஒரு சாரார். 338 | உலக முழுவதும் பரந்து மணம் கமழும் சந்தனக் குழம்பில் புழுகினைப் பெய்து நுண்ணிதாகப் பொடி படுத்திய கருப்பூரத்தைச்சேர்த்து வளவிய குங்குமப்பூவைக் கூட்டிக் கலவையாகுமாறு தேய்த்துச் சேமித்த குழம்பை அமைத்த பொற்குடங்களைச் சுமந்து விரைந்து வந்தனர் ஒரு சாரார். கண்ணடி சாமரை வெண்கேழ்க் கவிகை வளிஎறி வட்டம் புண்ணிய நீறு பளிதம் புகைமலி குங்குலி யங்கள் வண்ண மணிக்குடம் தட்டோ டாரா தனைக்கு வகுத்த எண்ணில் உறுப்பிற் பிறவும் ஈட்டின ரால்ஒரு சாரார். 339 | கண்ணாடியும், சாமரையும், வெண்குடையும், காற்றை வழங்குகின்ற ஆலவட்டமும், புண்ணிய வடிவாகிய திருநீறும், கருப்பூரமும், புகை மிக்க குங்கலியமும், குடமும், தட்டமும் தீபாராதனைக்கு வேண்டும் பிற உபகரணங்களும் தொகுத்தனர் ஒரு சாரார். நெய்விர வம்புய நாள நீளிழைத் தீபம் அனந்தம் பைவிரி பாந்தள் உயிர்த்த பரூஉமணித் தீபம் அனந்தம் தெய்வதத் தீபம் அனந்தம் தீம்புகை வர்க்கம் அனந்தம் கைவகுத் தெங்கணும் மல்கக் கண்டன ரால்ஒரு சாரார். 340 | தாமரைத் தண்டின் நூலும் நெய்யும் கூடிய விளக்குகள் எண்ணிலவும், படம் விரிக்கும் பாம்புகள் அளித்த மாணிக்க விளக்குகள் எண்ணிலவும், தேவர் தொகையில் அமைந்த தீபங்கள் எண்ணிலவும், இனிய நறும்புகைத் தொகைகள் எண்ணிலவும் கைசெய்து (பண்ணி) எங்கும் விளங்கச் செய்தனர் ஒரு சாரார். மாடக வச்சிரப் பத்தர் வார்நரப் பின்னிசை யாழும் பாடுறு பாடலும் ஒன்றப் பண்ணின் அமைமின் கள் என்றும் ஈடறு பற்பல் இயங்கள் எழுப்புமின் என்றும் இணங்க ஆடுமின் என்றும்விண் ணோரைப் பணித்தனர் ஆங்கொருசாரார். 341 | மாடகம், பத்தர் முதலிய உறுப்புக்கள் கூடிய யாழைச் சுருதி கூட்டிப் பாடற்குரிய பாடலை ஒன்றப் பண்ணுமின் எனவும், ஒப்பற்ற பலப்பல இயங்களில் இசைகளை எழுப்புமின் எனவும், அவற்றிற்குத் தக நடமிடுமின் எனவும் தெய்வமகளிரை ஏவுவோருமாவர். ஒரு சாரார். |