தழுவக் குழைந்த படலம் 683


     பிருதிவி முதலாகப் பூத சுத்தியைச் செய்து அந்தரியாகமாகிய அகப்
பூசையைப் புரிந்து அழகிய மலர்களையும், கருப்பூரம், குங்குமம் முதலிய
சேர்த்த வடித்த நீரை வாக்கிய குற்றமில்லாத பாத்தியம் ஆசமனம்,
அருக்கியம், எனப்படும் திருவடி கழுவுநீர், பருகுநீர், வாய்பூசுநீர், ஆகிய
இவற்றைத் தூய்மை செய்து வண்டு பாடும் கொன்றை மலர் மாலையரது
திருமுடிமேலுள்ள மலரை அகற்றி,

மாதர்வண் சத்தி யாதி சத்தியீ றிலக வாய்ந்த
ஆதன மதன்மேல் வைகும் சதாசிவ வடிவின் ஆன்ற
சோதியைத் திருவே கம்பச் சுடரினை நடுக்கீழ் பக்கம்
மீதற நிறைந்து விம்மும் ஆனந்த நிமல வாழ்வை.     356

     பிருதிவிமுதல் நாதம்ஈறாகிய தத்துவம் முப்பத்தாறினையும் ஆதனமாகக்
கொண்டு அதற்கு மேல் விளங்கும் மூர்த்தி மூர்த்திமான் எனப்படும் சத்தியி
னிடமாகத் தோன்றும் சிவபரஞ் சுடரை, திருவேகம்பத்தில் வீற்றிருக்கும்
சுடரொளியை, இடை, கீழ் மேல்மருங்கு எனப்படும் எவ்விடத்தும் நிறைந்து
பொங்கும் பேரின்ப வடிவினராகிய இயல்பாகவே தூய பெரிய வாழ்வை.

சீத்திருள் அறுக்கும் நோக்கால் தெளிவுறக் கண்டு போற்றிப்
பாத்தியம் முதலாம் மூன்றும் பதம்முகம் முடியின் ஈத்து
நாத்திகழ் மனுவின் மாண்ட நறுமது பருக்கம் நல்கி
ஆத்தன் நூல் விதியி னாற்றான் மறித்தும்ஆ சமனம் ஈந்தாள்.  357

     மலவிருளைத்துரக்கும் மெய்யறிவால் நன்குதரிசித்துத் துதிசெய்து
பாதநீர் முதலாகும் மூன்றனையும் திருவடியிலும், திருவாயிலும், திருமுடியிலும்
அவற்றிற் குரிய திருமந்திரத்துடன் வழங்கி மேலும், தயிர் நெய்பாலோடு
கூடிய உணவை மந்திரத்திரத்தொடும் வழங்கி அருக்கியபாத்திய ஆசமனம்
பின்னும் அளித்தனர்.

இணங்கிய நெய்பால் பெய்த இன்னமு திசைய நல்கி
மணங்கமழ் எண்ணெய்க் காப்பும் மாநெல்லி மஞ்சட் காப்பும்
அணங்கருங் கபிலை ஐந்தைந் தமுதுபல் குடத்துத் தீம்பால்
குணங்கெழு தயிர்நெய் செந்தேன் குளிர்இள நீரும் ஆட்டி.   358

     பசுவினது நெய்யும் பாலும் வாக்கிய இனிய போனகத்தை அதற்குரிய
மந்திரத்தொடும் வழங்கி, நறுமணமுடைய எள் நெய்க்காப்பும், மாக்காப்பும்,
நெல்லிக்காப்பும், மஞ்சட் காப்பும், வருந்துதல் இல்லாத தெய்வப்பசு
வழங்கிய பஞ்ச கௌவியமும், பஞ்சாமிர்தமும், இனிய பாலும், நன்கு
அமைத்த தயிரும், நெய்யும், செவ்விய தேனும், இளநீரும் ஆகிய இவற்றை
இவ்வரிசையில் திருமுழுக்காட்டி.

     ‘அரசன் நுகருவனவற்றைக் காப்பென்றல் மரபு’ எனவருதலை
‘மற்றடிகள்’ என்னும் சீவக சிந்தாமணிச் செய்யுளுரையில் காண்க.