கருப்புமிழ் தேறல் ஆட்டிப் பல்கனி வருக்கம் ஆட்டி அருத்திகூர் அன்பின் ஆன்ற சந்தனக் குழம்பும் ஆட்டி மருக்கமழ்ந் தெடுத்த கீர்த்தி மதித்தடங் கூவல் தெண்ணீர் உருத்திர மனுக்கள் ஓதி விதியுளி நிறைய ஆட்டி. 359 | கருப்பஞ் சாற்றினையும், பல்பழத் தொகைகளையும், வளர்ந்து கொண்டே வரும் அன்பினால் தேய்த்துச் சேர்த்த சந்தனச் சேற்றினையும் திருமுழுக்காட்டிக் கீர்த்தி மதி உண்டாக்கிய கிணற்றுத் தெண்ணீரில் மணம் ஊட்டிச் சீருத்திர மந்திரங்களை ஓதி அதனை விதிப்படி நிரம்ப ஆட்டி, நுழையும்நூற் கலிங்கம் ஏந்தி நொய்தென மேனி ஒற்றி விழைதகு நறும்பட் டாடை விளங்கெழில் முந்நூல் சாத்தித் தழையும்மான் மதங்கர்ப் பூரம் சந்தனக் கலவை சாத்தி இழைஅணி வருக்கம் ஏனை ஈர்ந்தொடை அலங்கல் சாத்தி. 360 | நுண்ணிய நூலானாய துகிலை ஏந்தி மெத்தெனத் திருமேனி ஈரத்தை ஒற்றிப் புலர்த்தி, விரும்பத் தக்க நல்ல பட்டாடையும், அழகு விளங்கு முப்புரி நூலும் அணிந்து, கத்தூரியும், கருப்பூரமும் விரவிய சந்தனக் குழம்பையும் மட்டித்து, இழைத்த அணித் தொகைகளையும் பிற தேனுடைய மலர் மாலைகளையும் சாத்தி, நறுவிரைத் தூபம் தீபம் காட்டிநால் வகைவே றுண்டி அறுசுவைத் திறத்தின் மாண அமுதுசெய் வித்துச் சீதம் உறுபுனல் உதவிக் கைவாய் பூசிஒண் பழுக்காய் வாசம் பெறும்இலை முகவா சங்கள் மந்திரம் பேசி நல்கி. 361 | நறுமணத் தூபம் தீபம் இவற்றைக் காட்டி, நால்வகையும் அறுசுவையும் உடைய உண்டிகளை நிவேதித்துக், குளிர்ந்த நீரால் அருக்கிய பாத்திய ஆசமனம் அளித்துப் பாகடை (தாம்பூலம்) கொடுத்துத் தக்கோலம், சாதிக்காய் முதலிய மந்திரத் தொடும் வழங்கி, அகிற்புகை தீபம் எல்லாம் இனிதளித் தரக்கு நன்னீர் மகிழ்ச்சியிற் சுழற்றிப் பல்கால் வலஞ்செய்து வணங்கிப்போற்றி இகப்பில்அஞ் செழுத்தும் எண்ணி இன்னன பிறவும் ஆற்றி முகிழ்த்தபே ரன்பின் ஆன்ற பூசனை முற்றச் செய்தாள். 362 | தூப தீபம் காட்டி ஆலத்தி நீர் சுழற்றிப் பலமுறை வலம் வந்து வணங்கித் துதித்து நீக்கமில் அஞ்செழுத்தையும் கணித்து இவை ஒப்பன பிறவும் செய்து அரும்பிய பேரன்பினொடும் விரிந்த பூசனையை முற்றுவித்தனர். முற்றுவித் தெழுந்து மீண்டும் மொய்யொளிப் பிலத்தின் பாங்கர் அற்றமில் அறம்எண் ணான்கும் அருள்வழி வளர்ப்பா ளாகிப் பற்றலார் புரம்செற் றாரை இம்முறை எண்ணில் பன்னான் சிற்றிடை எம்பி ராட்டி பூசனை செய்து வாழ்நாள். 363 | |